Published : 12 Jun 2020 08:55 AM
Last Updated : 12 Jun 2020 08:55 AM
கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிச்சடங்கின் போது மனிதநேயமற்று கையாண்டு வீசி எறிதல், நோயாளிகளை மரியாதைக்குறைவாக நடத்துதல் தொடர்பான செய்திகளை அறிந்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வனி குமார் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி, நாளேடுகளில் வந்த செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது
அஸ்வானி குமார் கடிதம், அதில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே இதை வழக்காகப் பதிவு செய்து நீதிபதிகள் அசோக் பூஷன், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணக்கு வருகிறது. “ கரோனா நோயாளிகளை முறையாக நடத்துதல், மற்றும் கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மதிப்புக்குரிய வகையில் கையாளுதல்” என்ற தலைப்பில் வழக்கு விசாரணைக்கு வருகிறது
மூத்த வழக்கறிஞர் அஸ்வானி குமார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “ கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை மரியாதைகக் கையாள வேண்டும். மதிப்புக்குரிய வகையில் உயிர்துறக்கும் உரிமை அனைத்து குடிமகனுக்கும் இருக்கிறது. கரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மனித நேயத்துடன் அணுகி, உரிய மரியாதையுடன் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்.
சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் கரோனா நோயாளியான முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் சங்கிலியால் கட்டிவைத்திருந்த சம்பவம் நடந்தது.
அதுமட்டுமல்லாமல் புதுச்சேரியில் கரோனா நோயால் இறந்த ஒருவரின் உடலை குழிக்குள் வீசி எறிந்த சம்பவமும் நடந்தது. தலைநகர் டெல்லியில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் அதிகரித்து வரும் போது, அந்த உடல்களை மரியாதையாக அடக்கம் செய்தல் அவசியம். இதுபோன்ற சம்பவங்களை ஏற்க முடியாது.
ஆனால், டெல்லி மருத்துவமனைகளில் உள்ள பிணவறையில் உடல்களை வைக்க இடமில்லாமலும், உடல்களை எரியூட்டும் மையத்தில் போதுமான வசதிகள் இல்லாமலும் இறந்தவர்கள் உடல்கள் மோசமான நிலைக்கு செல்கின்றன. இதனால் மரியாதையுடன் உயிர்துறக்கும் உரிமை மீறப்படுகிறது. இதை உச்ச நீதிமன்றம் வழக்காக எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT