Published : 12 Jun 2020 06:45 AM
Last Updated : 12 Jun 2020 06:45 AM

சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து கரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இந்தியா- இதுவரை 2.93 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று

மும்பை தாராவி பகுதியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் காய்ச்சல் பரிசோதனைக்காக காத்திருக்கும் பெண்கள். படம்: பிரசாந்த் நக்வே

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பில் அமெ ரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 6-வது இடத்தில் இருந்த இந்தியா நேற்று 4-வது இடத்துக்கு வந்தது. இந்தியாவில் இதுவரை 2.93 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் 1.41 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்தியாவில் வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனா வின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வைர ஸால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 75 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 35 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சர்வதேச புள்ளிவிவரம்

கரோனா தொற்று பாதிப்பில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளி களுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட் டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்அமெரிக்கா நாடான பிரேசில் 7.75 லட்சம் நோயாளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 39,803 பேர் உயிரிழந் துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 5 லட்சத்துக் கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 6,532 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக 6-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா, தற்போது 4-வது இடத்துக்கு வந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நாள்தோறும் காலை, மாலை யில் கரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வந்தது. கடந்த மே 6-ம் தேதி முதல் காலையில் மட்டுமே புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. இதன்படி, மத்திய சுகாதாரத் துறை நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘நாடு முழுவதும் ஒரே நாளில் 9,996 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்த மாக 2,86,579 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,41,029 பேர் குணமடைந்துள்ளனர். 1,37,448 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். ஒரே நாளில் 357 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,102 ஆக உயர்ந் துள்ளது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச அளவில் கரோனா வைரஸ் புள்ளிவிவரங் களை திரட்டி வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணைய தளம் நேற்றிரவு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, வைரஸ் பாதிப்பில் இந்தியா 4-வது இடத்துக்கு வந் துள்ளது. அந்த இணையதளம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் ‘இந்தியாவில் 2,93,754 பேர் வைர ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,143 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல்முறையாக நேற்று முன்தினம் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறுபவர்களைவிட குணமடைந்தவர்களின் எண் ணிக்கை அதிகரித்தது. இதேபோல நேற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது.

மாநில அளவிலான பாதிப்பு களை பொறுத்தவரை மகாராஷ்டிர தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 94,041 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று வரை 38,716 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள் ளனர். டெல்லியில் 32,810, குஜ ராத்தில் 21,521, உத்தர பிரதேசத்தில் 11,610, ராஜஸ்தானில் 11,600, மத்திய பிரதேசத்தில் 10,049, மேற்குவங்கத்தில் 9,328 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் நேற்று 83 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதில் 27 பேர் வெளி நாடுகளில் இருந்தும் 37 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு திரும்பியவர்கள். மாநிலத்தில் இதுவரை 2,244 பேர் வைரஸால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதில் 967 பேர் குணமடைந்துள்ளனர். 1,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி அமைச்சர் கருத்து

தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலோனோருக்கு எப்படி இந்த தொற்று ஏற்பட்டது என் பதை கண்டறிய முடியாத சூழல் நிலவுகிறது. இதுபோன்ற நிலை தான் ‘சமூகப் பரவல்’ அல்லது ‘வைரஸ் பரவலின் மூன்றாம் நிலை’ என அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி சுகா தாரத் துறை அமைச்சர் நேற்று முன் தினம் கூறும்போது, ‘‘டெல்லியில் சமூகப் பரவல் வந்துவிட்டதா என் பதை மத்திய அரசுதான் கூற வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்து மக்களிடையே பீதியை ஏற் படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித் துள்ளது. இதன் இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று, மூன்றாம் நிலை எனப் படும் சமூகப் பரவல் நிலையை இன்னும் எட்டவில்லை. எனவே, இதுகுறித்து நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

வைரஸ் தொற்று, சமூகப் பரவல் நிலையை அடையாததற்கு ஊரடங்கே முக்கிய காரணம்.

நாடு முழுவதும் 15 மாவட்டங் களில் மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் மேற்கொண்ட ஆய்வில், ஏப்ரல் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அங்குள்ள மக்கள் தொகையில் 0.73 சதவீதம் பேர் மட்டுமே கரோனா வைரஸ் தொற் றுக்கு ஆளாகியிருந்தனர். இதி லிருந்து மத்திய அரசின் தேசிய ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எப்படி ஏற்க முடியும்?

எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் எம்.சி.மிஸ்ரா கூறும்போது, ‘‘நாள் தோறும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்படு கிறது. மும்பை, டெல்லி, சென்னை யில் நோயாளிகளுக்கு வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. இப்படி இருக்கும்போது சமூக பரவல் இல்லை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை முறையாக கண்காணித்திருந்தால் வைரஸ் தொற்றை தடுத்திருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x