Published : 11 Jun 2020 04:22 PM
Last Updated : 11 Jun 2020 04:22 PM
நாட்டில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழலை தற்சார்பு பொருளாதாரத்துக்கான வாய்ப்பாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். துணிச்சலான முடிவுகளையும், முதலீடுகளையும் செய்ய வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கொல்கத்தாவில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் 95-வது ஆண்டுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''கடந்த 5 ஆண்டுகளாாக சுயசார்பு பொருளாதாரம் என்ற கொள்கைக்கு அதிகமான முன்னுரிமை அளித்து, இலக்காக வைத்து தேசம் நடைபோட்டது. இந்த முயற்சிகளை விரைவாக வழிநடத்துவது குறித்து கரோனாவின் சிக்கலான சூழல் நமக்குப் பாடம் கற்றுக்கொடுத்துள்ளது. பழமைவாத, பாரம்பரியமான நடவடிக்கைகளுக்கு இது உகந்த நேரம் அல்ல, துணிச்சலான முடிவுகளுக்கும், முதலீட்டுக்கும் உரிய நேரமாகும்.
உலகப் பொருளாதாரத்தில் வலிமையான போட்டியாளராகவும், பொருளாதாரத்தை வலிமையாகவும், ஸ்திரமகாவும் வடிவமைக்க இது சரியான நேரம். மக்களை மையமாகக் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியை உருவாக்குவதுதான் பாஜக அரசின் நிர்வாகத்தின் வழியாகும்.
நீண்டகாலமாக அடிமைத்தனத்தில் இருந்த கிராமப் பொருளாதாரத்தை சமீபத்தில் சிறப்பான முடிவின் மூலம் விடுவித்துள்ள மத்திய அரசு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க அனுமதியளித்துள்ளது.
கரோனா வைரஸோடு சேர்ந்து அசாம் வெள்ளம், வெட்டுக்கிளி தாக்குதல், பூகம்பம் என பன்முக சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
கரோனா வைரஸ் சிக்கலை நாம் சுயசார்பு பாரதம் உருவாக்குவதற்கான வாய்ப்பாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் பொருட்களை இறக்குமதி செய்யலாம். ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.
இந்த கரோனா பெருந்தொற்றுதான் நம் நாட்டுக்குத் திருப்புமுனையாக அமையப்போகிறது. இதை நாம் மிகப்பெரிய திருப்புமுனையாக மாற்றி, சுயசார்பு இந்தியாவாக மாற்ற வேண்டும்.
பொருளதாாரத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அளவுகோல் மாற்றம், கம்பெனிச் சட்டத்தில் குற்ற விஷயங்களை நீக்குதல், திவால் சட்டத்தில் திருத்தம், நிலக்கரி சுரங்கத் தொழிலில் அதிக போட்டியை உருவாக்குதல், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மாற்றம் போன்ற திருத்தங்களைச் செய்துள்ளோம்.
மேற்கு வங்கத்தை உற்பத்திக்கான மாநிலமாக மாற்ற வேண்டும். தேசத்தின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கும்போது மேற்கு வங்கம் ஆதரவாக இருக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சூரிய ஒளி மின்சக்தியில் ஆர்வம் காட்ட வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT