Published : 11 Jun 2020 11:53 AM
Last Updated : 11 Jun 2020 11:53 AM
மும்பையில் சிக்கித் தவித்த 700 புலம்பெயர் தொழிலாளர்களை உத்தரப் பிரதேசம் அனுப்பி வைக்க 4 தனி விமானங்களை ஏற்பாடு செய்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவியுள்ளார்.
700 புலம்பெயர் தொழிலாளர்களும் 4 விமானங்கள் மூலம் உ.பி.யின் லக்னோ, கோரக்பூர், வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 விமானங்கள் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றன. இன்று அதிகாலை ஒரு விமானம் புறப்பட்டது.
இந்த விமானங்களில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் உன்னாவ், கோண்டா, லக்னோ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தனர்.
மும்பையில் சிக்கித் தவித்த 700 புலம்பெயர் தொழிலாளர்களை முதலில் ரயிலில் அனுப்பி வைக்கவே அமிதாப் பச்சன் முடிவு செய்தாார். ஆனால், சூழல் சரியாக இல்லை என்பதால், அனைவரையும் இண்டிகோ விமானம் மூலம் அனுப்பி வைக்க முடிவு செய்தார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்கள் அனைத்தையும் அமிதாப் பச்சனின் நெருங்கிய உதவியாளரும், ஏ.பி.கார்ப்பரேஷனின் மேலாண் இயக்குநரான ராஜேஷ் யாதவ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சமீபத்தில் மும்பையிலிருந்து அமிதாப் பச்சன் சார்பில் ராஜேஷ் யாதவ், 300 புலம்பெயர் தொழிலாளர்களை 10 பேருந்து மூலம் லக்னோ, அலகாபாத், பாதோதி போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் விமான நிலையத்தில் இறங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துச் சென்றனர்.
முன்னதாக, பாலிவுட் நடிகர் சோனு சூட் கேரளாவில் சிக்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 180 புலம்பெயர் தொழிலாளர்களை விமானம் மூலம் புவனேஷ்வர் அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும், ஒடிசா, பிஹார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செல்ல தனிப்பேருந்து வசதிகளையும் சோனு சூட் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT