Published : 11 Jun 2020 07:35 AM
Last Updated : 11 Jun 2020 07:35 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 3 நாட்களாக தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகளுக்கு சோதனை அடிப்படையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. அலிபிரி மலையடிவாரம் முதல் சுவாமி சன்னதி வரை அனைத்து இடங்களிலும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது.
காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதால் ஒருநாளைக்கு சுமார் 6,500 பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்க முடிகிறது. நேற்று முன்தினம் உண்டியலில் ரூ.26 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டது.
இன்று முதல் அனைத்து தரப்பு பக்தர்களும் சுவாமியைதரிசிக்கலாமென அறிவிக்கப்பட்டது. தரிசனத்திற்கு முந்தைய நாள் திருப்பதியில் உள்ள 18 மையங்களில் ஏதாவது ஒரு மையத்தில் ஆதார் அட்டை மூலம்இலவச தரிசன டோக்கன் பெறலாம் என அறிவித்ததால், நேற்றுஅதிகாலை முதலே திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச் சென்றனர்.
இன்று முதல் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளதால் சுவாமி தரிசனம் செய்வதற்கான டோக்கன்களை தேவஸ்தானம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT