Published : 11 Jun 2020 06:49 AM
Last Updated : 11 Jun 2020 06:49 AM

பிஹாரில் ‘கோடீஸ்வரர்களான’ இரண்டு யானைகள்- அன்பாக வளர்ப்பவர் சொத்துகளில் பாதியை உயில் எழுதி வைத்தார்

பாட்னா

பிஹாரைச் சேர்ந்த 50 வயதானவர், தான் வளர்த்து வரும் 2 யானைகளுக்கு கோடிக்கணக்கான சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளார்.

பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் அக்தர் இமாம் (50). இவருக்கு யானைகள்மீது அலாதிப் பிரியம். இவர் மோதி(15), ராணி (20) என்ற 2 யானைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தான் இறந்த பிறகு தனது அன்புக்குரிய யானைகள் ஆதரவு இல்லாமல் உணவுக்காக அலையக் கூடாது என்பதற்காக, தனது சொத்துக்களை 2 யானைகளுக்கும் எழுதி வைத்துள்ளார் இமாம். தனது சொத்துகளில் பாதியை யானைகளுக்கு ஒரு பகுதியையும், குடும்பத்தாருக்கு ஒரு பகுதியையும் எழுதி வைத்துள்ளார் இமாம்.

இதுகுறித்து அக்தர் இமாம் கூறியதாவது: விலங்குகள் மனிதர்கள் போல் கிடையாது. அவைஉண்மையான அன்பை காட்டுகின்றன. நான் யானைகளின் பாதுகாப்புக்காக பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறேன். நான் இறந்த பிறகு எனது 2 யானைகள் யாரும் இல்லாமல் ஆதரவில்லாமல் இருப்பதை நான் விரும்பவில்லை. அதனால்தான் எனது சொத்துகளை யானைகளுக்கு வழங்கியுள்ளேன். யானைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வருங்காலத்தில் புத்தகங்களில் மட்டும்தான் அவற்றை பார்க்கும் நிலை ஏற்பட்டு விடும்.

இந்த 2 யானைகளும் எனது குழந்தைகளைப் போன்றவை. ஒரு முறை என்னைக் கொல்ல சிலர் முயன்ற போது யானைகள்தான் என்னை எச்சரித்துக் காப்பாற்றின. இவ்வாறு அக்தர் இமாம் கூறினார்.

யானைகளுக்காக தனது கோடிக்கணக்கான சொத்துகளை அக்தர் இமாம் எழுதி வைத்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிய யானைகள் புனர்வாழ்வு மற்றும் வன விலங்குகளுக்கான அரசு சாரா அமைப்பின் தலைவராக அக்தர் இமாம் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x