Last Updated : 11 Jun, 2020 06:44 AM

 

Published : 11 Jun 2020 06:44 AM
Last Updated : 11 Jun 2020 06:44 AM

கர்நாடக ஆயத்த ஆடை நிறுவனத்தில் 1,400 தொழிலாளர்கள் திடீரென வேலை நீக்கம்- பெண்கள் முற்றுகைப் போராட்டம்

பெங்களூரு

கர்நாடகாவில் கோகுல் தாஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய 1,400 ஊழியர்கள் திடீரென பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் கோகுல் தாஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் யூரோ ஆடை பிரிவு, 10 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி 20 சதவீத ஊழியர்களுடன் நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

அப்போது நிறுவனத்தின் வாயிலில், “கரோனா பாதிப்பின் காரணமாக நிறுவனத்துக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் 1,400 ஊழியர்கள் உடனடியாகபணி நீக்கம் செய்யப்படுகின்றனர்'' என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று சுமார் ஆயிரம் பெண் ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து யூரோ ஆயத்த ஆடை பிரிவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையறிந்த மண்டியா மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு வந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், ‘‘கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் அனைவரும் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் இழப்புகளை சந்திக்க நேரிடும். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஊழியர்கள் தங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக கலைந்து செல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x