Published : 11 Jun 2020 06:39 AM
Last Updated : 11 Jun 2020 06:39 AM

இந்திய மலைப்பகுதி படை வீரர்களுக்கு அனுபவம் அதிகம்- சீன ராணுவ நிபுணர் பாராட்டு

புதுடெல்லி

மலைப் பகுதியில் சிறப்பாக செயல்படும் உலகின் மிகப்பெரிய ராணுவ படைப் பிரிவு இந்தியாவிடம்தான் உள்ளது என்று சீன ராணுவ நிபுணர் பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து ‘மாடர்ன் வெப்பனரி’ பத்திரிகை ஆசிரியரும் ராணுவ நிபுணருமான ஹுவாங் குவோஸி என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

உலகளவில் தற்போதைய நிலவரப்படி பீடபூமி மற்றும் மலைப் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபடுவதற்கான மிகப்பெரிய அனுபவமிக்க படைப் பிரிவைக் கொண்டுள்ள நாடு இந்தியாதான். திபெத் எல்லை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் திறமையுடன் செயல்பட சரியான ஆயுதங்கள் இந்தியப்படைகளிடம் உள்ளன.

உலகிலேயே மலைப் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபடுவதற்காக 12 பிரிவுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட படை இந்திய ராணுவத்தில் உள்ளது. மலைப் பகுதி தாக்குதலில் ஈடுபடும் வீரர்களுக்கு மலையேறும் திறன் அவசியம் என்பதால் தொழில்முறை சார்ந்த மலையேற்ற வீரர்களை இந்திய ராணுவம் தேர்வு செய்திருக்கிறது.

உலகிலேயே மிக உயரமானபோர்முனையான சியாச்சினில் நூற்றுக்கணக்கான இந்தியராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ நிலைகளில் 7,000 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 6,749 மீட்டர் உயரத்தில் ஒரு ராணுவ நிலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவிடம் இருந்து எம் 777 ரக பீரங்கிகள்,சினூக் கனரக ஹெலிகாப்டர்கள்ஆகியவற்றையும் இந்தியா வாங்குகிறது. இது இந்தியாவின் ஆயுத திறனுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இவ்வாறு கட்டுரையில் ஹுவாங் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x