Last Updated : 09 Jun, 2020 02:59 PM

 

Published : 09 Jun 2020 02:59 PM
Last Updated : 09 Jun 2020 02:59 PM

டெல்லியில் சமூகப் பரவல் இல்லை; கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுபவர்களில் பாதிப்பேருக்கு தொற்றின் மூலம் தெரியவில்லை: சுகாதார அமைச்சர் பேட்டி

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பேட்டியளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

டெல்லியில் சமூகப்பரவல் ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆய்வுகளின்படி டெல்லியில் ஜூலை இறுதிக்குள் 5.50 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் 4-வது லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து கடந்த 4-ம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுவிட்டதால் மக்கள் எந்தவிதமான தடையும் இன்றி உலாவி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களில் டெல்லியில் உயிரிழப்பு 700-க்கும் மேலாக அதிகரித்தது.

அதுமட்டுமல்லாமல் சமூகப் பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 11 நாட்களாக படிப்படியாக் குறைந்து 39 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை எவ்வாறு சமாளிப்பது என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க கடந்த மே 2-ம் தேதி 5 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைத்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவனையின் முன்னாள் இயக்குநர் என்.கே.கங்குலி டெல்லியில் சமூகப்பரவல் தொடங்கிவிட்டதாக அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்திருந்தார்.

டெல்லி மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்க கேஜ்ரிவால் அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. டெல்லியில் சமூகப் பரவல் இருப்பதாகக் கூறப்படுவது தவறானது. டெல்லியில் சமூகப் பரவல் இல்லை என்பதை மத்திய அரசே தெரிவித்துள்ளது. ஆனால் டெல்லியில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பாதிப் பேருக்கு தொற்றின் மூலம் தெரியவில்லை'' என்று தெரிவித்தார்.

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
''மத்திய சுகாதாரத்துறை அதிகாிகள் ஆய்வின்படி டெல்லியில் சமூகப் பரவல் ஏதும் இல்லை. ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் கரோனாவால் 5.50 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது அரசு மருத்துவமனைகளில் 80 ஆயிரம் படுக்கைகள் வரை தேவைப்படும்.

டெல்லியில் இப்போதுள்ள சூழலில் வரும் 15-ம் தேதிக்குள் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 44 ஆயிரமாக அதிகரிக்கலாம். 6,600 படுக்கைகள் கூடுதலாகத் தேவைப்படும். ஜூன் 30-ம் தேதிக்குள் டெல்லியில் ஒரு லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்போது கூடுதலாக 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும்.

ஜூலை 15-ம் தேதிக்குள் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 33 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும். இப்போதுள்ள நிலையில் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 12 முதல் 13 நாட்களாகக் குறைந்தால் நிச்சயம் படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்படும். டெல்லி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தக் காரணத்தால்தான், டெல்லியில் உள்ள மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவை ஆளுநர் மீறுகிறார். அதிகமானோர் பாதிக்கப்பட்டு, படுக்கைகள் நிரம்பிவிட்டால் யார் பொறுப்பேற்பது?''

இவ்வாறு சிசோடியா தெரிவித்தார்.

டெல்லி மக்களுக்கு மட்டுமே டெல்லி அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவை ஆளுநர் ரத்து செய்தார். டெல்லி சேராத பிற மாநிலத்தவர் சிகிச்சைக்கு வந்தாலும் அவர்களைச் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுக்கக்கூடாது என உத்தரவிட்டார். இதனால் ஆளுநருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x