

டெல்லி மருத்துவமனைகள் டெல்லி கரோனா நோயாளிகளுக்கே வெளிமாநில நோயாளிகளுக்கு அல்ல என்று அரவிந்த் கேஜ்ரிவால் போட்ட உத்தரவை ‘முட்டாள்தனமானது’ என்று வர்ணித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீர்ரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் இந்த உத்தரவை கிடப்பில் போட்ட துணை நிலை ஆளுநரின் செயலைப் பாராட்டியுள்ளார்.
கரோனா நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே டெஸ்ட்டிங் மற்றும் டெல்லி மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்கே ஆகிய இரண்டு உத்தரவுகளை அரவிந்த் கேஜ்ரிவால் பிறப்பிக்க துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் அதனை நிராகரித்தார்.
இதனையடுத்து கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் ட்விட்டர் கணக்கில் தன் கருத்தைப் பதிவு செய்தார்:
துணைநிலை ஆளுநர் நல்ல முடிவெடுத்தார். டெல்லி மருத்துவமனைகளில் பிற மாநில நோயாளிகளுக்கு இடமில்லை என்ற உத்தரவு முட்டாள்தனமானது, இந்தியா என்பது ஒன்று. நாம் இந்த மக்கள் தொற்றை ஒன்றிணைந்தே எதிர்த்துப் போராட வேண்டும் என்று பதிவிட்டார்.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், கவுதம் கம்பீருக்கும் எப்போதும் பிரச்சினைதான். டெல்லி மருத்துவமனைகள் டெல்லிவாசிகளுக்கே என்று கேஜ்ரிவால் தெரிவிக்க அதற்கு கம்பீர், “உங்கள் தோல்வியை மறைக்க மாநில எல்லைகளுக்கு வெளியே இருப்பதனாலேயே அவர்களுக்கு அனுமதி மறுத்து தண்டிக்க வேண்டுமா? உங்களைப் போலவே, என்னை போலவே இவர்களும் இந்தியர்கள்தான், 30,000 நோயாளிகளுக்குத் தயாராகவே உள்ளோம் என்று நீங்கள் ஏப்ரலில் கூறியது நினைவில்லையா? இப்போது எதற்கு டெல்லி மருத்துவமனைகளை பிற மாநில நோயாளிகளுக்காக திறக்கலாமா என்ற கேள்வியைக் கேட்கிறீர்கள் மிஸ்டர் துக்ளக்?” என்று சாடியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.
ஆனால் துணை நிலை ஆளுநர் இரண்டு உத்தரவுகளை நிராகரித்ததையடுத்து அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக-வை கீழ்த்தரமான அரசியல் செய்வதாக சாடினார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு தொண்டைக் கட்டும், காய்ச்சலும் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவருக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்படவுள்ளது.