

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 80 நாட்களுக்கு பின்னர் நேற்று சோதனை முறையில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து தேவஸ்தான கோயில்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 5-ம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்த மத்திய அரசு, நிபந்தனைகளுடன் சில தளர்வுகளை அறிவித்தது. இதன்படி, ஆந்திராமற்றும் தெலங்கானா மாநிலங்களில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் நேற்று திறக்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 80 நாட்களுக்கு பிறகு சோதனை முறையில் நேற்று காலை 6.30 மணி முதல் தேவஸ்தான ஊழியர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் உள்ளூர் பக்தர்களும் கலந்து கொண்டனர். திருப்பதியிலிருந்து திருமலைக்கு பைக், கார், அரசு பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன.
எனினும், அலிபிரி சோதனைச் சாவடியில் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. முகக் கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டது. தெர்மல் ஸ்கேன் மூலம் பக்தர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் இருப்பவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், திருமலை சென்றடைந்த பக்தர்களுக்கு மறுபடியும் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அருகே கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி இருக்கும் வகையில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
கோயிலுக்குள் சென்றவர்கள் ‘ஜெயன்-விஜயன்’ சிலைகளின் அருகே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோயிலுக்குள் தீர்த்த, சடாரி மற்றும் இலவச பிரசாத விநியோகம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், உண்டியல் அருகே சமூக இடைவெளியுடன் சென்று காணிக்கையை செலுத்த அனுமதிக்கப்பட்டது. இன்றும் நாளையும் சோதனை முறையில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதுகுறித்து கோயிலின் வெளியே அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், 2 மணி நேரத்தில் 1,200 பக்தர்கள் வரை சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு வரும் 11-ம் தேதி முதல் சுவாமி தரிசனம்செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’’ என்றார்.
80 நாட்களுக்கு பின்னர் ஏழுமலையான் கோயிலில் வெள்ளோட்டத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கோயில்முகப்பு கோபுரம், பலிபீடம், கொடிகம்பம் உட்பட கோயிலுக்குள்ளும் பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.