Last Updated : 08 Jun, 2020 12:45 PM

1  

Published : 08 Jun 2020 12:45 PM
Last Updated : 08 Jun 2020 12:45 PM

உ.பி. கோயிலில் வழிபட்ட தலித், ஆதிக்க சாதியினரால் சுட்டுக் கொலை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

உத்தரப் பிரதேசத்தின் கோயிலில் வழிபட்ட 17 வயது தலித், ஆதிக்க சாதியினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் தந்தை முன்னதாக செய்த புகார் பதிவு செய்யப்படாததால் இந்தப் பரிதாபம் நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

உ.பி.யின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தது தும்காரா கிராமம். இங்கு வசிக்கும் வளர் இளம் பருவமான 17 வயதானவர் விகாஸ் குமார் ஜாத்தவ்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான இவர் அதே பிரிவின் வால்மீகி சமூகத்தினருடன் கிராமத்தின் வெளிப்புறப் பகுதியில் வசிக்கிறார். இவர்களுக்கு அதன் மையப்பகுதியில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் கட்டிய சிவன் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

இந்தக் கோயிலில் கடந்த 1 ஆம் தேதி விகாஸ் குமார் வழிபட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதைக் குறிப்பிட்டு அவரது தந்தையான ஓம் பிரகாஷ் ஜாத்தவ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதன்படி, கோயிலுக்குச் சென்ற தனது மகனை அங்கு வாழும் ஆதிக்க சாதி இளைஞரான ஹோராம் சவுகான் தடுத்து நிறுத்தியுள்ளார். இதைப் பொருட்படுத்தாத விகாஸ் குமார் கோயிலில் நுழைந்து வழிபட்டுள்ளார்.

இதை முடித்து வெளியில் வந்த விகாஸை ஹோராமுடன் சேர்ந்து மேலும் சில ஆதிக்க சாதியினர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் ஓம் பிரகாஷ் அளித்த புகார் பதிவாகவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படுத்திருந்த விகாஸ் குமாரை அவரது வீட்டில் ஹோராம் தலைமையில் புகுந்த ஒரு கும்பல் தாக்கியுள்ளது. பிறகு ஹோராம் தன்னிடம் இருந்து துப்பாக்கியால் தனது மகனைச் சுட்டுக் கொன்றதாக ஓம் பிரகாஷ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விகாஸ் குமாரின் தந்தையான ஓம்பிரகாஷ் ஜாத்தவ் கூறும்போது, ‘‘நான் முதலில் அளித்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் நான் மகனை இழந்திருக்க மாட்டேன். இதுபோல், அக்கோயிலுக்கு செல்லும் எங்கள் சமுதாயத்தினரை தாக்கூர்கள் மறிப்பது முதன் முறையல்ல’’ எனத் தெரிவித்தார்.

இவ்வாறு ஓம் பிரகாஷ் தனது புகாரில் கூறியள்ளதை அப்பகுதி காவல்துறையினர் மறுக்கின்றனர். ஒரு விளையாட்டில் அவர்கள் இடையே உருவான மோதலால் இந்தக் கொலை நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் காவல்நிலைய ஆய்வாளரான நீரஜ் குமார் கைப்பேசி வயிலாக கூறும்போது, ‘‘முதற்கட்ட விசாரணையில், கோயில் நுழைவு மற்றும் வன்கொடுமை ஆகியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இதன் மீது நான்கு குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம்’’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, விகாஸ் குமாரின் வழக்கில் கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் ஹோராம் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x