Published : 07 Jun 2020 08:35 PM
Last Updated : 07 Jun 2020 08:35 PM
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து துவங்கியப் போராட்டத்தில் டெல்லியில் கலவரம் வெடித்திருந்தது. இதில், தீவைக்கப்பட்ட ஒரு வீட்டில் 85 வயது மூதாட்டி பலியான வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் கலவரமாக உருவெடுத்திருந்தது. இது, அதன் பல பகுதிகளில் பரவியப் பகுதிகளில் ஒன்றாக வடக்கு கிழக்கு டெல்லியின் பகுதியும் இருந்தது.
இங்குள்ள பஜன்புரா பகுதியில் பிப்ரவரி 25 இல் நுழைந்த கலவரக்காரர்கள் பட்டப்பகலில் பல்வேறு வீடுகளில் புகுந்து சூறையாடினர். இதில் இரண்டடுக்கு கொண்ட ஒரு மாடி வீட்டிற்கு தீவைக்கப்பட்டது.
இதன் உள்ளே இருந்த குடியுருப்புவாசிகள் இரும்பு ஏணியில் ஏறி மேல்தளத்திற்கு சென்று தப்பினர். ஆனால், அவர்களது மூத்த உறுப்பினரான அக்பரி பேகம் எனும் 85 வயது மூதாட்டி தீயால் உருவானப் புகைமூட்டத்தில் மூச்சு திணறி தரைதளத்திலேயே சிக்கினார்.
இந்த தகவல் கிடைத்து தீயணப்பு படையுடன் டெல்லி போலீஸார் பஜன்புரா சேர்வதற்குள் அக்பரி பேகம் தீயில் கருகினார். இதனால், அவரது உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.
இந்த சம்பவத்தில் அக்பரியின் மகனான பஜன்புரா காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு டெல்லி காவல்துறையின் எஸ்ஐடி பிரிவால் விசாரிக்கப்பட்டிருந்தது.
இதில், அக்பரி பேகத்தின் வீடு தீவைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளும் அப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி இருந்தது. இவை அனைத்தையும் சேகரித்து தீவிர விசாரணை நடத்திய எஸ்ஐடி பிரிவின் வழக்கு நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டிருந்தது.
இப்பிரச்சனை எழுப்பியக் காங்கிரஸ் உறுப்பினர் கபில்சிபல், மத்திய உள்துறை மீது குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கு உள்துறை சார்பில் முக்கியக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த அருண்குமார், வருண்குமார், விஷால்சிங், ரவிகுமார், பிரகாஷ்சந்த் மற்றும் சூரஜ் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சார்பில் பலமுறை ஜாமீனுக்கு மனு அளிக்கப்பட்ட போது டெல்லி நீதிமன்றம் அதை நிராகரித்திருந்தது.
இந்நிலையில், அக்பரி பேகம் வழக்கில் டெல்லியின் எஸ்ஐடி பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து அக்பரி பேகத்தின் ராஜு பைய்யா என்றழைக்கப்படும் மூத்த மகனான முகம்மது சையது சல்மான் கூறும்போது, ‘அன்றைய தினம் வீட்டிற்கு பால் வாங்க நான் அருகிலுள்ள பகுதி சென்றிருந்தேன். அப்போது எனது வீட்டில் இருந்து வந்த போனில் சுமார் 150 பேர் கொண்ட கும்பல் மெயின்கேட்டை உடைப்பதாகத் தகவல் அளித்தனர்.
இதனால், அங்கு நான் போன போது அப்பகுதியினர் அங்கு செல்ல வேண்டாம் எனவும், சென்றால் என்னையும் கொன்று விடுவார்கள் எனத் தடுத்து விட்டனர். பிறகு சுமார் 10 மணி நேரம் கழித்து எனது தாயின் கருகிய உடல் வெளியில் எடுக்கப்பட்டது.’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT