Published : 07 Jun 2020 07:37 AM
Last Updated : 07 Jun 2020 07:37 AM

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார் ஷார்ஜீல் இமாம்: உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தகவல்

புதுடெல்லி

டெல்லியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பிஎச்டி படிக்கும் மாணவர் ஷார்ஜீல் இமாம். இவர், கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராடினார்.

குறிப்பாக, டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்திலும், உத்தரபிரதேசத்தின் அலிகர் பல்கலைக்கழகத்திலும் நடந்த போராட்டங்களின் போது, தேசத்துக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசினார். இதையடுத்து, அவர் மீது டெல்லி, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், உத்தரபிரதேச மாநிலங்களில், தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி, அவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். தற்போது, அவர் ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில், ஷார்ஜீல் இமாம் மீது டெல்லி போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஷார்ஜீல் இமாம்தொடர்பான வழக்கு விசாரணையின்போது ஓர் ஆவணத்தை போலீஸார் தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) திட்டத்துக்கு எதிராக போராடிய வழக்கில் ஷார்ஜீல் இமாம் கைது செய்யப்பட்டார். அந்தப் போராட்டத்தின்போது கலவரத்தைத் தூண்டும் வகையில் அவர் பேசினார். மத்திய அரசுக்குஎதிராக தொடர்ந்து இதுபோன்று அவர் பேசி வந்தார். அவருக்கு நீதிமன்றம் எந்தக் கருணையையும் காட்டக்கூடாது. அவரது பேச்சு மதவாத இயல்புடையதாக இருந்தன.

இது கடுமையான வகுப்புவாத மோதல்களை ஏற்படுத்தியது. மேலும் சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிரான போராட்டங்களின்போது பல்வேறு மத குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x