Published : 07 Jun 2020 06:57 AM
Last Updated : 07 Jun 2020 06:57 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில்குறித்து அவதூறு பேசியதாகநடிகர் சிவக்குமார் மீது திருமலைபோலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்படத்துறையின் பழம்பெரும் நடிகர் சிவக்குமார்திருப்பதி கோயில் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க வகையில்பேசிய ஒரு வீடியோவை தமிழ்மாயன் என்பவர் தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தவீடியோவை ஆய்வு செய்தோம். சிவக்குமாரின் பேச்சு, உலகம்முழுவதும் உள்ள பல கோடி ஏழுமலையான் பக்தர்களுக்கும் தேவஸ்தானத்தின் பெருமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி திருமலை 2-வது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
இலக்கியம்.. ஆரோக்கியம்... இல்லறம் என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்சிவக்குமார் பேசினார். “கடவுள் இருக்கிறார் என நினைத்தீர்களானால் சுனாமி ஏன் வந்தது? கோயிலில் இன்னமும் தீண்டாமை உள்ளது. ஏழை, பணக்காரன் பாகுபாடு கோயில்களில் உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடி கோடியாக காணிக்கை கொட்டுகிறது. காட்பாடியிலிருந்து 48 நாள் விரதமிருந்து, நடந்தே திருப்பதி கோயிலுக்கு செல்கிறான் ஒரு ஏழை பக்தன். இவன் நீண்டவரிசையில் காத்திருந்து பின்னர் தான் சாமியை தரிசனம் செய்கிறான். அங்கு பெரிய மூங்கில் குச்சியில் ‘ஜரகண்டி.. ஜரகண்டி' எனஅடித்து விரட்டுகிறார்கள். அதுவேஒரு பணக்காரன், மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்ணை அழைத்துக் கொண்டு திருமலைக்கு சென்று, விடுதி அறையில் தங்கி, மதுபோதையில் இருந்து விட்டு, காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் சென்றால், அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது” என சிவக்குமார் பேசியிருப்பது அந்த வீடியோ காட்சியில் உள்ளது.
மேலும் பலர் மீது வழக்கு
இதேபோன்று, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சுதா நாராயண மூர்த்தி தனது அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்தவர் மற்றும் கரோனா வைரஸ் தொற்றுகாரணமாக திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து என்பதற்கு பதிலாக வரும் ஜூன் 30-ம் தேதி வரை கோயில் மூடப்படுகிறது என்றும், திருமலையில் இருப்பது வெங்கடேச பெருமாளே கிடையாது, அது ஒரு புத்தர் சிலை என்றும் ஆதலால் தலைமுடி காணிக்கை செலுத்த வேண்டாம் எனவும் சமூக வலைத்தளங்களில் தேவஸ்தானத்துக்கும், வெங்கடேச பெருமாளின் கீர்த்திக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பிய அனைவர்மீதும் திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT