Published : 06 Jun 2020 05:51 PM
Last Updated : 06 Jun 2020 05:51 PM

சீனாவுடன் பேச்சுவார்த்தை நிறைவு; இந்திய குழுவினர் திரும்பினர்

கோப்புப் படம்

புதுடெல்லி 

இந்திய- சீன எல்லையில் லடாக்பகுதியில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் மூண்ட நிலையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இருதரப்பு அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது.
இந்த எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியில் சீனா மற்றும்பாகிஸ்தானை இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.

இந்தநிலையில் லடாக் பகுதியில் இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு காட்டவே சீனா இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
அப்போதிலிருந்து கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல் நிகழ்ந்துள்ளது.

இதன்தொடர்ச்சியாக இரு தரப்பும் தமது வலிமையை காட்டும் வகையில் ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் குவித்துள்ளன.மோதல் நிகழும் பகுதியையொட்டி தமது எல்லைக்குள் சுமார் 5,000 வீரர்களையும் அதற்கேற்ப பீரங்கி உள்ளிட்ட தளவாடங்களையும் சீனா குவித்துள்ளது. இந்தியாவும் அதற்கு சவால்விடும் வகையில் சீனாவைவிட அதிகஅளவில் படைகளை குவித்துள்ளதுடன் ராணுவ தளவாடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்த மோதல் தொடர்பாக சுமார் 1 மாதமாக தீர்வு காணப்படாததால் தேக்கநிலை நிலவுகிறது. கர்னல்கள், பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்கள் என ராணுவத்தின் பல்வேறு நிலைஅதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தீர்வு ஏற்படவில்லை.
இந்த சூழலில் லெப்டினன்ட் ஜெனரல்கள் நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் லடாக் பகுதியில் நிகழ்ந்த மோதல் விவகாரம் முன்வைக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் 14 பேரும், சீன ராணுவ கமாண்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். சீனா கட்டுப்பாட்டு எல்லை அருகே மோல்டோவில் நடந்த பேச்சுவார்த்தை முடிவுற்றதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடிந்து இந்திய தரப்பினர் லே பகுதிக்கு திரும்பியுள்ளனர். எனினும் இதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x