Last Updated : 06 Jun, 2020 04:51 PM

 

Published : 06 Jun 2020 04:51 PM
Last Updated : 06 Jun 2020 04:51 PM

கரோனா பாதிப்பு: ஹஜ் புனிதப் பயணக் கட்டணத்தைத் திருப்பி அளிக்க ஹஜ் கமிட்டி முடிவு

கோப்புப்படம்

மும்பை

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரேபியா அரசு எந்தவிதமான தகவலும் அளிக்காததால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப்பயணம் செல்லப் பணம் செலுத்தி இருந்தார்கள். இதில் 1.25 லட்சம் பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும், 47 ஆயிரம் பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமும் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சவுதி அரேபிய அரசு கடந்த மார்ச் 12-ம் தேதியே ஹஜ் புனிதத் தலங்களை மூடிவிட்டது. இதுவரை இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் தொடங்குவது குறித்து எந்த நாட்டுக்கும் சவுதி அரேபியா அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

சவுதி அரேபியாவிலும் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. 600்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயணம் நடக்காது என்று எண்ணி ஏற்கெனவே பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தாங்களாகவே முன்வந்து ஹஜ் புனிதப் பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டன.

இந்த சூழலில் ரமலான் பண்டிகையையொட்டி நடக்கும் ஹஜ் புனிதப் பயணமும் நடக்கவில்லை. சவுதி அரேபிய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஏதுவான சூழல் இல்லாததால் பணத்தைத் திருப்பி வழங்குவதாக மகாராஷ்டிர ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

மேலும் இந்திய ஹஜ் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி மசூத் அகமது கான் நிருபர்களிடம் கூறுகையில், “2020-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் நடப்பதற்கு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே வாய்ப்புள்ளது. அனைவருக்கும் முழுமையான தொகையை வழங்கக் கடிதம் எழுத இருக்கிறோம்.

மார்ச் 13-ம் தேதி தற்காலிகமாக ஹஜ் பயணத்தை ரத்து செய்வதாக சவுதி அரேபிய அரசிடம் இருந்து தகவல் வந்தது. ஆனால், அதன்பின் எந்தத் தகவலும் இல்லை. 2020-ம் ஆண்டு ஹஜ் பயணத்தைத் தொடங்க இன்னும் சில வாரங்களே இருப்பதால் இந்த ஆண்டு சாத்தியம் இல்லை எனத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மகாராஷ்டிர ஹஜ்கமிட்டி தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், “இந்தியா லாக்டவுன் அறிவிக்கும் முன்பே சவுதி அரேபியா ஹஜ் புனிதத் தலங்களை மூடிவிட்டது. இதுவரை ஹஜ் புனிதப் பயணம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை என்பதால் இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் நடப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஆதலால், பணத்தைத் திருப்பி வழங்குகிறோம். இதில் யாரையும் குறை கூற முடியாது. கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து நாடுகளும் இந்த முடிவை எடுக்கின்றன. அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு தேர்வு செய்தவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம்” எனத் தெரிவித்தார்.

இந்திய ஹஜ் மற்றும் உம்ரா நலக் கூட்டமைப்பின் தலைவர் சயத் மில்லி கூறுகையில், “ஹஜ் பயணம் இந்த ஆண்டு இல்லை என்பதற்காக இழப்பீடு கேட்பது நியாயமற்றது. அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களையே அழைத்துச் செல்ல அரசிடம் கோரிக்கை வைப்போம். ஹஜ் கமிட்டி மூலம் செல்வோர் ரூ.2 லட்சத்து ஆயிரம் ரூபாயும், கிரீன் கேட்டகரி பிரிவில் ரூ.2.90 லட்சமும் செலுத்தினார்கள்” எனத் தெரிவித்தார்.

வழக்கமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஜூன் 22-ம் தேதி ஹஜ் புனிதப் பயணத்துக்கு விமானங்கள் புறப்படும். மகாராஷ்டிராவிலிருந்து ஜூலை 28-ம் தேதி புறப்படும். ஹஜ் புனிதப் பயணத்தை முடித்து ஆகஸ்ட் மாதம் திரும்புவார்கள். ஆனால், இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x