Published : 06 Jun 2020 03:42 PM
Last Updated : 06 Jun 2020 03:42 PM
சமூக வலைத்தளம் பிரியாங்கா காந்தியை ‘முக்கியமான தேசத் தலைவர்’ என்று சித்தரிக்கிறது, ஆனால் அவரை நாங்கள் ‘பிரியங்கா ட்விட்டர் வதேரா’ என்றுதான் அழைக்கிறோம் என்று உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா கிண்டல் செய்துள்ளார்.
பிரியங்காவினால் தன் சகோதரர் ராகுல் காந்தியையே வெற்றி பெறச் செய்ய முடியவில்லை என்று மேலும் விமர்சனம் செய்தார், பிரியங்கா வதேரா, சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் இழிநிலையைக் குறிப்பிட்டு உ.பி. அரசை, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்வதையடுத்து துணை முதல்வர் இவ்வாறு கிண்டல் செய்துள்ளார்.
துணை முதல்வர் மவுரியா கூறும்போது, “நான் பிரியங்கா வதேராவை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் ஏற்கெனவெ அவரை பிரியங்கா ட்விட்டர் வதேரா என்றுதான் அழைக்கிறோம், அவர் 2-3 நாட்களுக்கு ட்வீட் செய்வார், உடனே ஊடகங்கள் சுறுசுறுப்பாக இயங்கும். சமூக வலைத்தளம் அவரை ‘முக்கியமான தேசத் தலைவர்’ என்று காட்டும்.
ஆனால் அவர் உ.பி.க்கு காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரத்துக்கு வந்த போது தன் சகோதரரை பிரதமராக்கி விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்தார், ஆனால் பாவம் அவரது தொகுதி வெற்றியைக் கூட உறுதி செய்ய முடியாமல் போனது” என்று கடுமையாக கேலி செய்தார் மவுரியா,
2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி, ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார்.
துணை முதல்வர் மவுரியா மேலும் கூறும்போது, “உ.பி.யில் காங்கிரஸ் தன் அடித்தளத்தையே இழந்து விட்டது. புகைப்பட வாய்ப்புகள் நீங்கலாக அவர்களுக்கு அங்கு தலைவர் இல்லை.
பாஜக ஆளும் மாநிலங்களை அவர் விமர்சனக் கண்ணோட்டம் கொண்டே பார்ப்பதால் அவருக்கு வேறு நல்ல விஷயங்கள் கண்களில் படுவதில்லை.
காங்கிரஸ் கட்சியினர் மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கரில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதில்லை. அவர்களுக்கு திருஷ்டி தோஷம் (பார்வைக்கோளாறு) உள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அல்லது யாராக இருந்தாலும் கண்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது.
மோடிஜி, யோகிஜி ஆகியோரை எதிர்மறைக் கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டேயிருந்தால் அதற்கு தீர்வே கிடையாது. அவர்கள் நல்ல மருத்துவரைப் பார்த்து நல்ல தரமான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்” என்று கடுமையாகக் கேலி செய்தார் துணை முதல்வர் மவுரியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT