Last Updated : 06 Jun, 2020 02:42 PM

 

Published : 06 Jun 2020 02:42 PM
Last Updated : 06 Jun 2020 02:42 PM

அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 21-ல் தொடக்கம்: நாட்கள் குறைப்பு; பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

கோப்புப்படம்

ஜம்மு

ஜம்மு காஷ்மீரின் இமாலய மலையில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்க தரிசன புனித யாத்திரை வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக யாத்திரை நாட்கள் 15 நாட்களாகச் சுருக்கப்பட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி முடிகிறது.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் பனிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் யாத்திரை விவகாரக் குழுவான ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலைய வாரிய (எஸ்ஏஎஸ்பி) அதிகாரிகள் இன்று அறிக்கை வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

''2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பயண நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. யாத்திரை தொடங்குவதற்கான பூஜை நேற்று முடிந்துள்ளது.

சாதுக்களைத் தவிர்த்து 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த முறை யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். யாத்திரையில் பங்கேற்கும் அனைத்து மக்களும் கண்டிப்பாக கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தபின் அதற்குரிய சான்தறிதழை வழங்கிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் யாத்திரை செல்லும் வழியிலும் சோதனை நடத்தப்படும். அப்போது கரோனா அறிகுறிகள் இருந்தால் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். சாதுக்களைத் தவிர்த்து அனைத்து பக்தர்களும் யாத்திரைக்கான ஆன்லைனில் தங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த முறையில் அமர்நாத் குகைக் கோயிலில் காலை, மாலை இரு வேளையும் ஆரத்தி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆரத்தி நடக்கும் 15 நாட்களும் நேரலையில் பக்தர்களுக்கு ஒளிபரப்பப்படும்.

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக உள்ளூர் தொழிலாளர்கள் பணிக்குக் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் குகைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளைப் பராமரித்தலில் இடர்ப்பாடுகள் நிலவுகின்றன. ஆதலால், கந்தர்பால் மாவட்டத்தின் பால்தால் முகாமிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் யாத்திரை தொடங்கும்.

இந்த முறை எந்த பக்தரும் காஷ்மீரின் பாஹல்காம் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை தொடங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து பக்தர்களும் காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள பால்தால் பாதை வழியாகவே அனுமதிக்கப்படுவார்கள்.

15 நாட்கள் நடக்கும் யாத்திரை ஆகஸ்ட் 3-ம் தேதி ரக்சாபந்தன் பண்டிகையான ஷ்ரவண் பூர்ணிமா அன்று நிறைவடையும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x