Published : 05 Jun 2020 03:53 PM
Last Updated : 05 Jun 2020 03:53 PM
கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவை எதிர்க்கட்சிகளும், பெலகாவி மக்களும் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து பெங்களூருவில் இன்று எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெலகாவியில் ஆண்டுதோறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதற்கு ஏதுவாக அங்கு சுவர்ண சவுதா (தலைமைச் செயலகம்) கட்டப்பட்டது. இந்த ஆண்டு கரோனா பாதிப்பின் காரணமாக அங்கு பேரவை கூட்டம் நடத்த முடியவில்லை.
மேலும் பெலகாவி மக்கள் பெங்களூருவில் உள்ள அரசு அலுவலகங்களை அங்குள்ள சுவர்ண சவுதாவுக்கு மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரசு அலுவலகப் பணிகளுக்காக பெலகாவியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பெங்களூரு வருகின்றனர். இதனால் பெலகாவியை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் மிகுந்த மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே நான் முதல்வராக பொறுப்பேற்ற உடன் சில துறைகளின் அலுவலகங்களை பெலகாவிக்கு மாற்ற உத்தரவிட்டேன். ஆனால் துறை சார்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதில் ஈடுபாடு காட்டவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பொதுப்பணி, நீர்ப்பாசனம், துறைமுகம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
அதன்படி பெங்களூருவில் இயங்கிவரும் சில துறைகளின் அலுவலகங்களை உடனடியாக பெலகாவிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டேன். இந்த அலுவலகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஓரிரு மாதங்களில் பெலகாவிக்கு சென்று ஆய்வு செய்வேன்'என்றார்.
எடியூரப்பாவின் இந்த உத்தரவால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அதே வேளையில் பெலகாவியை சுற்றியுள்ள மாவட்ட மக்களும், அந்த மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ், மஜத போன்ற எதிர்க்கட்சிகளும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பெலகாவியை மகராஷ்டிர மாநிலம் கேட்டுவரும் நிலையில், எடியூரப்பாவின் இந்த நடவடிக்கை கர்நாடகாவுக்கு பலம் சேர்க்கும் என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT