கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியே இருக்கும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்களை வரும் 8-ம் தேதி முதல் திறந்துகொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. திரையரங்கம், குழந்தைகள் விளையாடும் இடங்களைத் திறக்க அனுமதியளிக்கவில்லை.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள் மூடப்பட்டிருந்தன. உணவங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில் வரும் 8-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கும் ஷாப்பிங் மால்களைத் திறக்க அனுமதியில்லை. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியே இருக்கும் மால்களை மட்டுமே திறக்கலாம்.
மால்களுக்குள் வரும் அனைவரும் கண்டிப்பாக தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட வேண்டும். மாலுக்கு வருவோருக்கு சானிடைசர் வழங்க வேண்டும்.
கரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ஷாப்பிங் மால்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
ஷாப்பிங் மால்களில் பணியாற்றுவோர், கடை வைத்திருப்போர், பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது.
கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகள், சுவரொட்டிகள் ஆங்காங்கே இடம் பெற வேண்டும். ஒலிபெருக்கி, வீடியோ மூலம் அவ்வப்போது விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும்.
ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகளுக்குள் செல்லும் மக்கள் சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
வாகனங்களை நிறுத்தும் இடங்களில் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாகனங்கள் வருவதற்குத் தனி நுழைவாயிலும், செல்வதற்குத் தனி நுழைவாயிலும் இருக்க வேண்டும்.
வீடுகளில் பொருட்களை வழங்கும் பிரிவில் பணியாற்றுவோருக்கு தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்தபின் அவர்களை டெலிவரி செய்ய அனுப்பி வைக்க வேண்டும்.
எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தும்போது, கூட்டமாக மக்கள் செல்லாமல் இடைவெளியுடன் மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். அதாவது ஒரு படி விட்டு மற்றொரு படியில் 2-வது நபர் நிற்குமாறு சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
குளிர்சாதன வசதியுள்ள கடைகளில் 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்குமாறும், ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரை இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஷாப்பிங் மாலுக்கு வரும் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் அதிமாகத் தொடும் பொருட்களான கதவுகளின் கைப்பிடிகள், லிஃப்ட் பட்டன்கள், எஸ்கலேட்டர் கைப்பிடிகள், இருக்கைகள், ஓய்வறைகள் போன்றவற்றை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கழிவறைகளைக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.
உணவகங்களில் உள்ள இருக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் வாடிக்கையாளர்கள் அமராத வகையில் பராமரித்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உணவகங்களில் பணியாற்றுவோர் முகக்கவசம், கைகளுக்குக் கையுறை போன்றவர்றை அணிந்து பணியாற்ற வேண்டும். உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்வதும் போதுமான அளவு இடைவெளிவிட்டு இருத்தல் வேண்டும்.
ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் விளையாடும் பிரிவு, திரையரங்கம் தொடர்ந்து மூடப்பட வேண்டும்.
ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களிடம் கடை உரிமையாளர்கள் ஊக்கப்படுத்தலாம்.
ஷாப்பிங் மாலில் யாருக்கேனும ஒருவருக்கு கரோனா இருப்பது அறிகுறி மூலம் தெரியவந்தால் அவரைத் தனிமைப்படுத்தி, மாவட்ட மருத்துவமனை, அல்லது மருத்துவ உதவி எண்ணுக்குத் தகவல் அளிக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நபருக்கு கரோனா இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டால் அவர் வந்து சென்ற இடத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
ஷாப்பிங் மால்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்படுகிறது.
ஷாப்பிங் மால்களுக்கு வருவோர் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
WRITE A COMMENT