Published : 04 Jun 2020 07:08 PM
Last Updated : 04 Jun 2020 07:08 PM
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால் அவரை அழைத்து வருவதில் தாமதம் ஏற்படலாம் என இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதுபான ஆலை, விமான நிறுவனம் எனப் பல்வேறு தொழில்களை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரைத் தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது.
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தபோதிலும் சில மணிநேரத்தில் ஜாமீன் பெற்றார். அப்போதிருந்து ஜாமீனில் வெளியே இருக்கும் மல்லையா நீதிமன்றத்தில் தன்னை நாடு கடத்துவற்கு எதிரான வழக்கைச் சந்தித்து வந்தார்.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணிகள் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கெனவே லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்தத் தடையில்லை எனக் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு வந்த 20 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதால், உச்ச நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை கடந்த மாதம் 14-ம் தேதி விசாரித்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க மல்லையாவுக்கு இருந்த கடைசி சட்ட வாய்ப்பும் முடிந்துவிட்டதால் அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் விரைவுபடுத்தினர்.
மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வற்கான அனைத்துச் சட்டப்பணிகளும் முடிந்துவிட்டதால், அவர் வரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இந்தியா அழைத்து வரப்படலாம் என்ற தகவல் வெளியானது.
இந்த சூழலில் மல்லையாவை அழைத்துச் செல்வதில் சட்டச் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாததால், அவரை இந்தியா அழைத்து வருவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம் என இங்கிலாந்து அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் கூறுகையில், “மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படலாம். எவ்வளவு காலம் தாமதம் ஏற்படலாம், எப்போது தீர்க்கப்படும் என்பதை தெரிவிக்க முடியாது. தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் மல்லையாவை இந்தியா அழைத்துச் செல்வதில் சட்டச் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. அவரை அழைத்துச் செல்லும் முன் அனைத்து சட்டச் சிக்கல்களையும் தீர்ப்பது அவசியம்.
பிரிட்டன் சட்டப்படி சட்டச் சிக்கல் தீர்க்கப்படாத வரை யாரையும் நாட்டைவிட்டு அனுப்ப மாட்டார்கள். இது மிகவும் ரகசியமானது என்பதால் இதற்கு மேல் தெரிவிக்க இயலாது. எத்தனை நாள் இந்தப் பிரச்சினை நீடிக்கும் என்பதும் தெரியாது. ஆனால் விரைவாகத் தீர்க்கப்படவே அனைவரும் முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே விஜய் மல்லையா தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக பிரிட்டன் அரசிடம் அரசியல் புகலிடம் கோர வாய்ப்புள்ளதாக சிபிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக இறுதி உத்தரவு நகல் இன்னும் சிபிஐ அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை. அதனால் இப்போதுள்ள நிலையில் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு வாய்ப்பில்லை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மல்லையாவின் மனு நிராகரிக்கப்பட்டதில் இருந்து 28 நாட்களுக்குள் அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணிகள் தொடங்கப்படலாம். அந்த வகையில் வரும் 11-ம் தேதியுடன் அந்தத் தேதி முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT