Published : 04 Jun 2020 02:39 PM
Last Updated : 04 Jun 2020 02:39 PM
கேரளத்தில் அன்னாசிப் பழத்துக்குள் வெடிவைத்து கர்ப்பிணி யானையைக் கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களைக் கேரள அரசிடம் மத்திய அரசு கேட்டிருக்கிறது. கேரள முதல்வரும் இந்தக் கொடுஞ் செயலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
கேரளத்தின் அமைதிப்பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை ஒரு கிராமத்துக்குச் சென்றபோது அங்கு இருந்தவர்கள் உள்ளுக்குள் வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை அதற்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. வயிற்றில் குட்டியோடு இருந்த அந்த யானை அதைச் சாப்பிட்டபோது வெடி வெடித்து நாக்கு, வாய் ஆகிய உறுப்புகள் சிதறின.
வேதனை தாங்கமுடியாமல் தண்ணீருக்குள் இறங்கி நின்று தவித்தது அந்த யானை. வனத்துறை அதிகாரிகள் கும்கி யானையின் உதவியோடு அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் யானையைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக மன்னார்காடு வனச்சரகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும் இதுகுறித்து வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்தே யானையின் இறப்பு தேசிய அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து சமூக வலைதளத்தில் பலரும் இதுகுறித்தே பதிவிட்டு வருகின்றனர்.
எந்த ஒரு காட்டு மிருகத்தையும் கொல்லும் நோக்கத்தோடு வலை விரிப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை. அதேநேரம் அன்னாசிப் பழத்தில் வெடி வைத்திருந்தது பயிர்களை அழித்துக் கொண்டிருக்கும் காட்டுப் பன்றிகளுக்கு வைக்கப்பட்ட குறியாகவும் இருக்கலாம் என மலப்புரம் மாவட்ட வனத்துறையினர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
பொதுவாகவே இந்தப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காட்டு விலங்குகள் தங்கள் பயிரைச் சேதப்படுத்தாமல் இருக்க இரண்டு அடிக்கு முள்வேலி அமைத்து, அதனூடே வெடிப் பொருள்களை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்தப் பொறியில் தப்பிக்கும் விலங்குகளுக்கு விஷம் தடவிய அல்லது வெடிவைத்த பழம், காய்களை வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மன்னார்காடு கோட்ட வன அலுவலர் சுனில்குமார், “அன்னாசிப் பழத்தை யாரும் நேரடியாக யானைக்குக் கொடுத்திருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் யாரையும் குறிப்பிட்டுப் பெயர் சேர்க்காமல் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.
யானை நேரடியாகப் பழத்தைக் கடித்ததா அல்லது முள்வேலியோடு இருந்த வெடிபொருள்களைக் கடித்ததா எனவும் விசாரித்து வருகிறோம். சிலர், காட்டுப் பன்றிகளைக் கொன்று சாப்பிடவும் வெடிவைப்பதாகத் தகவல் வருகிறது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். யானை தண்ணீரில் இருந்துதான் மீட்கப்பட்டது. அதனால் அதற்கு வெடிவைக்கப்பட்ட இடத்தை சரியாக சொல்லமுடியவில்லை. அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்” என்றார்.
வாய்ப் பகுதியில் கோரத் தாக்குதலுக்கு உள்ளாகி, நாக்கு சிதைந்து போன நிலையிலும் வயிற்றில் குட்டியை சுமந்திருந்த அந்த யானை எந்த குடியிருப்புகளுக்கும் புகுந்துவிடவில்லை; யாரையும் தாக்கவில்லை. தாங்கமுடியாத வலியிலும் நிதானமாகவே இருந்தது. ஆனால், நம் மனிதர்களுக்குத்தான் நிதானம் இல்லை. வனப்பகுதியை ஒட்டியே விவசாயம் செய்கிறோம். யானையோ, காட்டுப்பன்றியோ எந்த மிருகமாயினும் அதை துரத்தும் உத்திகளைக் கையாளலாம். கொல்வது அறமாகுமா? விவசாயிக்குப் பயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இன்னொரு விலங்கின் உயிரும் முக்கியம் அல்லவா?
படித்தவர்கள் நிறைந்த கேரளா, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மது கொலைக்குப் பின், இந்த கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்திலும் தலைகுனிந்து நிற்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT