Published : 04 Jun 2020 12:13 PM
Last Updated : 04 Jun 2020 12:13 PM
உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் மலையாளிகள் தாயகம் திரும்ப வசதியாக கேரளத்தில் வந்தே பாரத் திட்டத்தின்படி அனைத்து நாட்டு விமானங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் கூறியதாவது:
“கேரளாவில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 19 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். ஒரு பெண் மருத்துவர் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 5 பேருக்கு நோய் பரவியுள்ளது.
கேரளத்தில் நேற்று ஒரே நாளில் 4,000 பேருக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 1,494 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 832 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் 1,58,864 பேர் வீடுகளிலும், 1,440 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். புதிதாக நோய் அறிகுறிகளுடன் 241 பேர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் மலையாளிகளைத் தாயகம் அழைத்துவர வசதியாக வந்தே பாரத் திட்டத்தின்படி கேரளாவுக்கு எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம் என மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் 2-ம் தேதி வரை 140 விமானங்கள் மூலம் 24,333 பேரும், 3 கப்பல்கள் மூலம் 1,488 பேரும் மொத்தம் 25, 821 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளம் வந்துள்ளனர். மேலும், கேரள மக்களை அழைத்து வர வசதியாக கேரளத்தில் அனைத்து நாட்டு விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டு விமானத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை.”
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT