Published : 04 Jun 2020 07:46 AM
Last Updated : 04 Jun 2020 07:46 AM

இந்தியா- சீனா எல்லை மோதலுக்கு தீர்வு காண ராணுவ அதிகாரிகள் 6-ம் தேதி பேச்சுவார்த்தை: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி

இந்திய- சீன எல்லையில் லடாக்பகுதியில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வரும் 6-ம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்திலான ராணுவ உயர்அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியில் அண்மையில் சீனராணுவ வீரர்களுக்கும் இந்திய படைவீரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இந்த மோதல்தொடர்பாக சுமார் 1 மாதமாக தீர்வு காணப்படாததால் தேக்கநிலை நிலவுகிறது. கர்னல்கள், பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்கள் என ராணுவத்தின் பல்வேறு நிலைஅதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தீர்வு ஏற்படவில்லை. இந்த சூழலில் வரும் 6-ம் தேதி லெப்டினன்ட் ஜெனரல்கள் நிலையில் பேச்சு நடத்தப்பட உள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த பேச்சுவார்த்தையில் லடாக் பகுதியில் நிகழ்ந்த மோதல் விவகாரம் முன்வைக்கப்படும்.

நேற்றுமுன்தினம் வடக்கு பகுதிராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி லடாக் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் படைகளின் தயார்நிலை பற்றி லே பகுதியில் உள்ள 14-ம் படைப்பிரிவு கமாண்டர் ஹரிந்தர் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே இப்போது ஏற்பட்டுள்ள மோதல் முன்புபோல அல்லாமல் மாறுபட்டது என்பதை காட்டுவது போன்று சீனாவின் தற்போதைய நடவடிக்கை உள்ளது என்று கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "அதிக எண்ணிக்கையில் சீன படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் நமது படைவீரர்களும் அவர்களுக்கு சமமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) விவகாரத்தில் சீனாவுக்கு உள்ள மாறுபட்டகண்ணோட்டம் மோதலுக்கு வழிவகுக்கிறது. இதனால்தான் எல்லையில் அடிக்கடி மோதல் நிகழ்கிறது. இதை சீனா புரிந்துகொண்டால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்"என்றார்.

லடாக் பகுதியில் இரு தரப்புராணுவத்துக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. அங்குள்ள பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு காட்டவே சீனா இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

அப்போதிலிருந்து கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல் நிகழ்ந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக இரு தரப்பும் தமது வலிமையை காட்டும் வகையில் ராணுவ வீரர்களையும் தளவாடங்களையும் குவித்துள்ளன.

மோதல் நிகழும் பகுதியையொட்டி தமது எல்லைக்குள் சுமார் 5,000 வீரர்களையும் அதற்கேற்ப பீரங்கி உள்ளிட்ட தளவாடங்களையும் சீனா குவித்துள்ளது. இந்தியாவும் அதற்கு சவால்விடும் வகையில் சீனாவைவிட அதிகஅளவில் படைகளை குவித்துள்ளதுடன் ராணுவ தளவாடங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது.

இந்த எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியில் சீனா மற்றும்பாகிஸ்தானை இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து சீனாவுக்கு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x