Published : 02 Sep 2015 09:07 AM
Last Updated : 02 Sep 2015 09:07 AM
ஹைதராபாத் விமான நிலையத்தில் ‘அயன்’ திரைப்பட பாணியில், போதை மருந்துகளை வயிற்றில் வைத்து கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் சிக்கினார். அவரது வயிற்றில் 51 போதை மருந்து பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச அளவில் தொடர் புடைய சில கும்பல் ஹைதராபாத் தில் உள்ள சில முக்கிய பிரமுகர் களுக்கு போதை மருந்துகளை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து வந்த பயணிகளிடம், போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது யாரும் சிக்கவில்லை.
ஆனால் ஒரு வெளிநாட்டுப் பெண் சந்தேகப்படும் வகையில் விமான நிலையத்தில் திரிந்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், “நான் நைஜீரியாவை சேர்ந்தவள். எனது பெயர் மூசா முசாயின் (32). துபாயிலிருந்து இங்கு வந்துள்ளேன். 7 மாத கர்ப்பிணியாக உள்ளதால் உடல்நிலை சோர்வாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், மூசா முசாயினை விமான நிலையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை நடத்தினர். அவரது அடிவயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்தபோது, இரண்டு தனித்தனி பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் உடனடியாக அவரை ஹைதராபாத் உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எண்டோஸ்கோபிக் போன்ற சோதனைகள் நடத்தப்பட் டன. அதன்பிறகுஅவரது வயிற்றில் போதை மருந்து பாக்கெட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் வயிற்றில் உள்ள போதை மருந்துகளை அறுவை சிகிச்சை செய்யாமல் வெளியே எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அவரை அதிக அளவில் தண்ணீர் குடிக்க வைத்தனர். பின்னர்‘எனீமா’ கொடுத்ததில், முதலில் 16 போதை பாக்கெட்டுகள் வெளியே வந்தன. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை மீண்டும் எனீமா கொடுக்கப்பட்டது. அதன் மூலம் 24 போதை பாக்கெட்டுகள் வெளியே வந்தன. பின்னர் மூசா முசாயின் உடல்நிலை சீரானது.
இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் மேலும் சில போதை மருந்து பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. மீண்டும் எனிமா கொடுத்ததில் நேற்று 11 போதை மருந்து பாக்கெட்டுகள் வெளியே வந்தன.
இரு பிளாஸ்டிக் பைகளில், ஆணுறைகள் மூலம் கோகைன் போன்ற போதை மருந்துகளை கடத்த முயன்றுள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பாக்கெட்டும் சுமார் ஒரு அங்குலம் முதல் ஒன்றறை அங்குலம் வரை உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவ மனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மூசா முசாயினை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர், போதை மருந்துகளை கொடுத்து அனுப்பியது யார்? யாருக்காக கொடுக்கப்பட இருந்தது, இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னால் உள்ள பிரமுகர்கள் யார்? என போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் ஹைதராபாதில் உள்ள திரைத் துறை, அரசியல் பிரமுகர்கள்,தொழிலதிபர்கள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT