Published : 03 Jun 2020 01:00 PM
Last Updated : 03 Jun 2020 01:00 PM
இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதாக செய்திகள் வரும் நிலையில் , சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்தார்களா இல்லையா என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும், அதாவது இந்திய பகுதிக்குள் அவர்கள் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
செவ்வாயன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில்’ சீன துருப்புகள் கிழக்கு லடாக் பகுதிக்கு நகர்ந்துள்ளஹ்டாகவும் இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியப் பகுதிக்குள் எந்த ஒரு சீன ராணுவ வீரரும் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஜூன் 6ம் தேதி கிழக்கு லடாக் பகுதி பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் சீனாவும் உயர்மட்ட ராணுவ சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதான அறிக்கை ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
எல்லையில் என்னதான் நடக்கிறது? மவுனம் நிச்சயமின்மைக்கும் யூகங்களுக்குமே வழிவகுக்கும் என்று கூறிய ராகுல் காந்தி, “எல்லை சூழ்நிலை குறித்து அரசின் இந்த மவுனம் பெரிய யூகங்களுக்கே வழிவகுக்கிறது. மேலும் நெருக்கடி காலத்தில் நிச்சயமற்ற நிலையையும் உருவாக்குகிறது” என்றார் ராகுல்.
இந்திய-சீன துருப்புகள் இடையே பங்காங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் பெக் ஓல்டி, கிழக்கு லடாக் ஆகிய பகுதிகளில் சிக்கல் நீடிக்கிறது.
2017 டோக்லாம் பிரச்சினைக்குப் பிறகு இது மீண்டும் தலைதூக்கியுள்ளது பலருக்கும் கவலைகளை அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் ராகுல் காந்தி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT