Published : 03 Jun 2020 07:30 AM
Last Updated : 03 Jun 2020 07:30 AM
கருத்து கணிப்புகளை நடத்துவதில் முன்னோடி நிறுவனமான சி-வோட்டர் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு, மாநில அரசுகள் குறித்து கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. மாநிலம்தோறும் தலா 3,000 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநில அளவில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 95.6 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 93.95%, சத்தீஸ்கரில் 92.73%, ஆந்திராவில் 83.6% பேர் பிரதமர் மோடியை ஆதரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது. எனினும் அந்த மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு 82.97 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது.
மகாராஷ்டிராவில் 71.48 சதவீதம் பேரும் வடகிழக்கில் 69.45 சதவீதம் பேரும், மேற்கு வங்கத்தில் 64.06 சதவீதம் பேரும் பிரதமரை ஆதரித்துள்ளனர். கேரளாவில் 32.89%, தமிழகத்தில் 32.15% பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய அளவில் 0.58 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவுதெரிவித்துள்ளனர். எனினும் கோவா, கேரளா, தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைவிட ராகுல் காந்திக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. மாநில முதல்வர்களில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு 82.96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு 81.06%, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு 80.28%, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு 78.01% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
மக்களின் அதிருப்தியை பெற்ற முதல்வர்களின் பட்டியலில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் பழனிசாமி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT