Published : 03 Jun 2020 07:13 AM
Last Updated : 03 Jun 2020 07:13 AM
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கி 13 ஆண்டு களுக்கு பிறகு முதன்முறையாக இயக்குநர் தேர்வு செய்யப்பட் டுள்ளார். இது ‘இந்து தமிழ் திசை' நாளேட்டில் வெளியான செய்தியின் தாக்கமாக அமைந்துள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியால் சென்னையில் 2006-ல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இதற்கு நிரந்தரமான பதவியில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் நியமிக்கப்படவில்லை. இதனால் முடங்கும் நிலைக்கு உள்ளான செம்மொழி நிறுவன இயக்குநர் பதவி குறித்து ‘இந்து தமிழ் திசை' நாளேட்டில் ஏப்ரல் 2018 முதல் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இச்செய்தியின் எதிரொலியாக கடந்த வருடம் அக்டோபர் 30-ல் இயக்குநர் பதவிக்கான கலந் தாய்வுத் தேர்வு டெல்லியில் நடை பெற்றது. 5 பேருடன் நடைபெற்ற தேர்வின் முடிவு வெளியிடாமல் தாமதித்தபோதும் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் செய்தி வெளியானது. இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தின் கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் விழுப்புரம் தொகுதி எம்.பி. டி.ரவி குமார் உள்ளிட்ட எதிர்கட்சியினர் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இயக்குநர் பதவிக்கு முனைவர் இரா.சந்திரசேகரன் (47) தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். காங்கேயம் அரசு கலைக்கல்லூரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியரான சந்திரசேகரன், தமிழ் உள்ளிட்ட துறைகளில் 2 முனைவர் பட்டமும், 4 முதுநிலைப் பட்டங்களும் பெற்றுள்ளார். இவருக்கு அளித் துள்ள 3 வருடத்துக்கான பதவிக் காலம் மேலும், 2 வருடங்கள் நீட்டிக்கப்பட வல்லது.
இவரது தேர்வு குறித்து செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் தொடங்கியபோது இயக்குநர் பொறுப்பில் இருந்த மத்திய மொழிகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் க.ராமசாமி ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறும்போது, "13 வருடத்துக்குப் பின் முதல்முறையாக தேர்வான புதிய இயக்குநர், நிறுவனத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவார் என நம்புகிறேன். இப்பதவியை நிரப்பக் காரணமாக செய்திகள் வெளியிட்டு தொடர்ந்து வலியுறுத் திய இந்து தமிழ் திசை நாளேட் டுக்கும், மக்களவை எம்.பி டி.ரவி குமாருக்கும் பாராட்டுகளை தெரி வித்துக் கொள்கிறேன்" என்றார்.
செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக் குழுவின் தலைவராக தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் அமர்த்தப்பட்டுள்ளார். எனினும், செம்மொழி நிறுவனத் தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருவருக்கும் இல்லாத அனைத்து அதிகாரங் களும் அதன் இயக்குநருக்கு மட்டுமே உண்டு. இயக்குநர் பதவி நிரப்பப்படாமல், சென்னை தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவன மான ஐஐடியில் இருந்து இயக்குநர், பதிவாளர், ஆங்கிலப் பேராசிரியர் என ஆறு பேர் கூடுதல் பொறுப்பு வகித்தனர்.
தற்போது, என்ஐடியின் பதிவா ளரான பழனிவேலுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர்கூட தமிழறி ஞர் இல்லை என்பதால், 13 வருடங் களாக செம்மொழி நிறுவனம் கண்ட இழப்பை மீட்டெடுப்பது புதிய இயக்குநருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT