Published : 02 Jun 2020 07:16 AM
Last Updated : 02 Jun 2020 07:16 AM

ஆந்திராவில் 12 பேர் உயிரிழந்த விவகாரம்; விஷ வாயு கசிவுக்கு நிறுவன அலட்சியமே காரணம்- தேசிய பசுமை தீர்ப்பாய குழு அறிக்கை

அமராவதி

விசாகப்பட்டினம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் விஷவாயுகசிவு மனித தவறுகளாலும், அந்நிறுவனத்தின் அலட்சியப்போக்காலும் நடந்துள்ளது என தேசிய பசுமை தீர்ப்பாய குழு நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தில் கடந்த மாதம் விஷ வாயு கசிந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாயினர். சுமார் 5 கிராமங்களில் தண்ணீர், காற்று, நிலம் மாசடைந்தது.

இதனால் இக்கிராம மக்களின் விவசாய உற்பத்தியும் பாதிப்புக்குள்ளானது. நூற்றுக்கணக்கானோர் சரும வியாதிகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 1 கோடி நஷ்டஈடு வழங்கியது ஆந்திர அரசு.

மேலும், உடல் நிலை படுமோசமடைந்தோருக்கு ரூ.10 லட்சமும், லேசான பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம்முதல் 25 ஆயிரம் வரையிலும், 5 கிராமத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் வீதமும் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

இதனிடையே விஷவாயு பரவ காரணமான எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை விசாகப்பட்டினத்திலிருந்து வேறு ஊருக்கு மாற்றிட வேண்டுமென மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து விஷவாயு விபத்து குறித்து ஆந்திர அரசு சிறப்பு விசாரணை கமிட்டி அமைத்தது.

மனித தவறும் காரணம்

மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஓய்வு பெற்ற நீதிபதி சேஷசயன ஷர்மா தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்தது. இக்குழு விசாரணை நடத்தி, நேற்று விஜயவாடாவில் உள்ள பசுமை தீர்பாய நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், விஷவாயு கசிவுக்கு மனித தவறுகளும், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தின் அலட்சியப்போக்குமே காரணமென அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து இன்று மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x