Published : 02 Jun 2020 07:14 AM
Last Updated : 02 Jun 2020 07:14 AM

கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி உறுதி- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி

கரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி. அந்த வைரஸுக்கு எதிரான போரில் நமது மருத்துவர்கள் வெற்றியடைவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில்பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். அவர் கூறியதாவது:

இரண்டு உலகப் போருக்குப் பிறகு உலகம் இப்போது மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. உலகப் போருக்குப் பிறகுபல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதேபோல கரோனா வைரஸுக்கு எதிரான போருக்குப் பிறகு உலகில் மாற்றங்கள் ஏற்படும்.

இந்த இக்கட்டான நேரத்தில் ஒட்டுமொத்த உலகமும், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், அறிவியல் சமூகத்தை நம்பிக்கையுடனும் நன்றியுடனும் பார்க்கிறது. இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராக நமது மருத்துவர்கள் வீர, தீரத்துடன் போரிட்டு வருகின்றனர். அவர்கள் சீருடை அணியாத போர் வீரர்கள்.

கரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம். அதேநேரம் நமது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், யாராலும் வெல்ல முடியாத போர் வீரர்கள். இந்த போரில் நமது மருத்துவ பணியாளர்கள் வெற்றியடைவது உறுதி.

கடந்த 6 ஆண்டுகளில் சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வியின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சுகாதாரத் துறையைப் பொறுத்த வரை, 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டு மத்தியஅரசு செயல்படுகிறது.

முதலாவது தூண், ‘வரும் முன் காப்பது'. இதன்படி யோகா,ஆயுர்வேதம், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் 40,000-க்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

2-வது தூண், ‘குறைவான கட்டணத்தில் மருத்துவம்'. இதன்படி ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது உலகிலேயே மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாகும். இந்த திட்டத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர்.

3-வது தூண், ‘மருத்துவ உள்கட்டமைப்பு'. இதன்படி நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவ கல்வி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்பில் கூடுதலாக 30,000 இடங்களும் உயர் மருத்துவக் கல்வி படிப்பில் 15,000 இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசியமருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

4-வது தூண், ‘திட்ட செயலாக்கம்'. இதன்படி நாடு முழுவதும் தேசிய ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திரதனுஷ் தடுப்பு மருந்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 'டெலி மெடிசின்' திட்டத்துக்கு மத்திய அரசுமுக்கியத்துவம் அளித்து வருகிறது.

மேலும் சுகாதாரத் துறையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன்படி கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்காக ஒரு கோடி பாதுகாப்பு கவச உடைகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.2 கோடி என்-95 முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸுக்கு எதிராகமுன்வரிசையில் போராடுவோருக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு வசதியை வழங்கியுள்ளோம். சிகிச்சை மற்றும் வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு பொதுமக்கள் உரிய மரியாதை அளிக்கவேண்டும். அவர்களை பாரபட்சமாக நடத்தக்கூடாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x