Last Updated : 01 Jun, 2020 01:48 PM

 

Published : 01 Jun 2020 01:48 PM
Last Updated : 01 Jun 2020 01:48 PM

மைய அரங்கத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்?

கோப்புப் படம்

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் மைய அரங்கத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்தத் திட்டமிடப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் ஆலோசனை நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூன் இறுதி வாரத்தில் வழக்கமாகத் தொடங்கும். கரோனா பரவல் அச்சுறுத்தலால் அத்தொடரை குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

இதற்கு அதன் உறுப்பினர்கள் இடையே சமூகவிலகல் கடைப்பிடிக்க வேண்டியதும் முக்கியக் காரணமாக உள்ளது. இதற்கான இடப்பற்றாக்குறை இருப்பதால் வேறு வாய்ப்புகள் குறித்து நாடாளுமன்ற இருஅவைகளால் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற மக்களவையின் மொத்த இருக்கைகள் 545, மாநிலங்களவையில் 250. நாடாளுமன்ற மத்திய அரங்கத்தின் மொத்த இருக்கைகள் 776 ஆகும்.

எனவே, நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் வழக்கமாக இருஅவைகளின் உறுப்பினர்களுடன் குடியரசு தலைவர் உரை நாட்களில் கூட்டம் நடைபெறும்.

மற்ற நாட்களில் இரு அவைகளுக்கும் தனித்தனியாக உள்ள அரங்கத்தில் கூட்டத்தொடர் மாறி விடும். வெளிநாடுகளில் இருந்து வரும் முக்கியப் பிரமுகர்களின் உரைகள் நிகழ்த்தவும் மத்திய அரங்கம் பயன்படுகிறது.

மற்ற நாட்களில் இருஅவைகளின் தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற உறுப்பினர்களும் அமர்ந்து தம் நினைவுகளை பகிர்ந்து கொள்வர். இங்கு அனைத்து கட்சியினரும் ஒரே சமயத்தில் வரும் வாய்ப்புகள் உள்ளதால், சிலசமயம் அரசியல் ஆலோசனைகளும் நடைபெறுவது உண்டு.

மைய அரங்கத்தினுள், குறிப்பிட்ட ஆண்டுகள் அனுபவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, இருஅவைகளின் மொத்த உறுப்பினர்களும் அமரும் மத்திய அரங்கில் கூட்டம் நடத்தத் திட்டமிடப்படுகிறது.

இதில், மாநிலங்களவை உறுப்பினர்களை சமூகவிலகலுடன் அமரவைக்கும் வசதிகள் தாராளமாக உள்ளன. மக்களவை உறுப்பினர்களுக்காக சில கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வேண்டி வரும்.

இதனால், ஏதாவது ஒரு அவையின் எம்.பிக்களை சமூகவிலகலுடன் அமரவைத்து கூட்டம் நடத்த முடியும் எனக் கருதப்படுகிறது. இதன்படி, முதல்நாள் மக்களவையும், மறுநாள் மாநிலங்களவையும் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

இதேபோல், இருஅவைகளின் நிர்வாக அதிகாரிகள் அமரவும் வசதி செய்ய வேண்டு இருக்கும். ஆனால், இருஅவைகளில் இருப்பது போன்று ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் எதிரெதிராக அமர வைப்பது சிரமம் ஆகும்.

எனினும், கூட்டத்தொடரின் முதல்நாளில் நடைபெறும் குடியரசு தலைவர் உரையில் இருஅவைகளின் எம்.பிக்களையும் ஒன்றாக அமரவைக்க முடியாது. இதை கானொலிக்காட்சியில் நடத்த முடியுமா? எனவும் ஆலோசிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற சட்டப்படி அதன் கூட்டத்தொடர் முடிவுபெற்ற ஆறு மாதங்களுக்கு முன்பாக அடுத்த தொடரை நடத்த வேண்டும். இந்தவகையில் கடைசியாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23 இல் நிறைவு பெற்றது.

இது ஏப்ரல் 2 வரை திட்டமிடப்பட்டாலும், கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கால் முன்னதாக முடிக்கப்பட்டது. இந்த சூழலில், அடுத்ததான மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்த செப்டம்பர் 22 ஆம் தேதி வரை காலஅவகாசம் இருப்பது நினைவுகூரத்தக்கது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x