Published : 01 Jun 2020 01:08 PM
Last Updated : 01 Jun 2020 01:08 PM
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கம்போல் ஜூன் 1-ம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் மே மாதம் 30-ம் தேதியே தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 1-ம் தேதிதான் தொடங்க வாய்ப்பிருப்தாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை ஜூலை 15-ம் தேதிக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யத் தொடங்கும். தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே விவசாயத் துறை செழிக்கவும் ஆதாரமாக இருக்கிறது.
தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ம் தேதி அறிவித்துள்ளது.
பின்னர் வங்கக்கடலில் உருவான உம்பன் புயலாலும் அரபிக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாலும் தென்மேற்குப் பருவமழை வழக்கமான நாளான ஜூன் 1-ம் தேதி தொடங்கும் எனக் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இந்த சூழலில் தென்மேற்குப் பருவமமழை தொடங்கிவிட்டதாக, அதாவது இரு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக ஸ்கைமெட் அறிவித்திருந்த நிலையில் இந்திய வானிலை மையம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியற்தான அனைத்துக் காரணிகளும் சரியாகப் பொருந்தியதால் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மிருதுன்ஜெ மொகபத்ரா நிருபர்களிடம் கூறுகையில், “கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டது. அதற்கான அனைத்துக் காரணிகளும் பொருந்தியுள்ளன. இந்த ஆண்டு இயல்பான மழை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்ட அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
பருவமழையைத் தீர்மானிக்கும் 3 காரணிகள் என்ன?
பருவமழையைத் தீர்மானிக்க மூன்று வகையான காரணிகள் உள்ளன. மே 10-ம் தேதிக்குப் பின் கேரளாவில் உள்ள 14 வானிலை மையங்களான மனிகாய், அமினி, திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், குடகு, மங்களூரு ஆகியவற்றில் தொடர்ந்து இரு நாட்களுக்கு மேலாக 2.5 மில்லி மீட்டருக்கு மேல் பெய்திருந்தால் பருவமழை செட்டாகிவிட்டது.
2-வதாக மேற்கிலிருந்து வரும் காற்று 600 ஹெக்டோபாஸ்கஸ் (ஹெச்பிஏ) இருத்தல் வேண்டும். மூன்றாவதாக அவுட்வேவ் லாங்வேவ் ரேடியேஷன் சதுர கிலோ மீட்டருக்கு 200 வாட்டுக்குக் கீழ் இருத்தல் வேண்டும்.
இந்த மூன்று காரணிகளும் பொருந்தினால் பருவமழை தொடங்கிவிட்டதாக கணக்கில் கொள்ளப்படும் என இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT