Last Updated : 01 Jun, 2020 09:16 AM

 

Published : 01 Jun 2020 09:16 AM
Last Updated : 01 Jun 2020 09:16 AM

இந்தியாவில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரை வெளியேற்றியது மத்திய அரசு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் இரு அதிகாரிகள் அந்நாட்டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக இந்தியாவில் உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரையும் 24 மணிநேரத்துக்குள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அபித் ஹூசைன், முகமது தாஹிர் இருவரும் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்களை நேற்று பணம் கொடுத்து வாங்கியபோது அவர்களை டெல்லி போலீஸார் பிடித்தனர். இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி, இரு அதிகாரிகளும் வரவேற்கப்படாத நபர்கள் அடிப்படையில் அடுத்த 24 மணி நேரத்துக்குள்(ஞாயிற்றுக்கிழமைக்குள்) வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தாங்கள் வகிக்கும் பதவிக்கு தகுதியற்ற செயலைச் செய்துள்ளார்கள். ஆதலால், இருவரும் இந்தியாவால் வரவேற்கப்படாத நபர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். ஆதலால் இருவரும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்படுறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “பாகிஸ்தான் தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் இரு அதிகாரிகளும் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பாகப் பணி செய்து, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை ஐபோன், பணம் ஆகியவற்றைக் கொடுத்து சிலருக்கு ஆசை காட்டி வாங்கினர். இதை டெல்லி போலீஸார் கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் பிடித்தனர்” எனத் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில், “இரு நாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியான உறவுகளை மேலும் சீர்குலைக்கும் விதமாக இந்தியாவின் செயல் இருக்கிறது. இந்தியாவின் ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம். இந்தியாவின் செயல்பாடு முழுவதும் வியன்னா தீர்மானத்துக்கு எதிராக இருக்கிறது” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா ரத்து செய்தபின், இஸ்லாமாபாத்தில் செயல்படும் இந்தியத் தூதரகத்தின் அதிகாரியை வெளியேற்றி, தூதரக உறவின் மதிப்பீட்டைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று காலை இஸ்லாமாபாத்தில் செயல்படும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் டெல்லியில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகத்தில் இரு அதிகாரிகளை உளவு பார்த்த குற்றச்சாட்டில் வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்து அந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x