Published : 01 Jun 2020 07:54 AM
Last Updated : 01 Jun 2020 07:54 AM
பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு விரைவில் புத்தகமாக வெளியாகவுள்ளது.
குஜராத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நரேந்திர மோடி, சிறு வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பிறகுபாஜகவில் சேர்ந்தார். பின்னர், அக்கட்சியில் பல்வேறு படிநிலைகளில் களப்பணியாற்றி பிற்காலத்தில் குஜராத் முதல்வராக அவர் பதவியேற்றார். அதன் பிறகு, நாட்டின் பிரதமராக அவர் உயர்ந்துள்ளார்.
கட்சியில் இருக்கும்போது களப்பணிக்காக அவர் பல ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் அவர் தனது தாயாருடன் சேர்ந்து வாழ்ந்த நாட்கள் மிகவும் குறைவு ஆகும். இதனிடையே, தனது இளமைக் காலத்தில் தினமும் தனது தாயார் ஹீராபென்னுக்கு கடிதம் எழுதுவதை மோடி வழக்கமாக வைத்திருந்தார். அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்களை சில மாதங்களுக்கு பிறகு அவரே கிழித்து விடுவாராம்.
இந்நிலையில், அவரது தாயாரின் இல்லத்தில் உள்ள ஒரு டைரியில் பிரதமர் மோடியின் கண்களுக்கு படாமல் சில கடிதங்கள் இருந்திருக்கின்றன. தற்போது அந்த கடிதங்களை தொகுத்து புத்தகமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தியில் இருக்கும் அந்தக் கடிதங்களை பிரபல பத்திரிகையாளர் பாவனா சோமையா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘லெட்டர்ஸ் டூ மதர்’ என்ற தலைப்பிலான அந்தப் புத்தகம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி கூறும்போது, “எனது எழுத்துகள் இலக்கிய ரீதியிலானது கிடையாது. ஆனால் எனது புரிதல்கள், எண்ணங்கள் ஆகியவற்றை எந்தவித தணிக்கையும் செய்யாமல் இந்தக் கடிதங்கள் பிரதிபலிக்கும். நான் எழுத்தாளன் இல்லை. என்னைப் போலவே பெரும்பாலானோர் எழுத்தாளர்கள் கிடையாது. ஆனால், உணர்வை வெளிப்படுத்தும் ஆவல் எல்லோருக்கும் இருக்கும். உணர்வுகளை அடக்கி வைக்கும்போது ஒரு நேரத்தில் அவைவெளிபட்டே ஆகும். அவற்றையே எழுத்துகள் மூலமாக நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT