Published : 31 May 2020 11:37 AM
Last Updated : 31 May 2020 11:37 AM
கேரளத்தில் கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக நேற்று மாலை திருவனந்தபுரத்தில் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''கேரளாவில் இன்று புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரும், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4 பேரும், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், திருவனந்தபுரம், ஆலப்புழா மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேரும், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர்.
மேலும், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 7 பேருக்கும் இன்று நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய கரோனா தொற்றாளர்கள் பட்டியலில், நுரையீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவரின் பரிசோதனை முடிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும், 17 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள். பாலக்காட்டைச் சேர்ந்த சுகாதாரத்துறை பெண் ஊழியர் ஒருவருக்கும் நோய் தொற்று பரவி உள்ளது. இதில்லாமல் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 2 பேருக்கு நோய் தொற்று பரவியுள்ளது.
சிகிச்சியில் இருந்தவர்களில் இன்று 10 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இவர்களில் 4 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 3 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா ஒருவர் திருவனந்தபுரம், கோட்டயம், கண்ணூர் மாவட்டங் களையும் சேர்ந்தவர்கள். தற்போது மருத்துவ மனைகளில் 624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 575 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,28,953 பேர் வீடுகளிலும், 1,204 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 243 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3,206 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கேரளத்தில் இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள மாணிக்கல், பாலக்காடு மாவட்டத்திலுள்ள பாலக்காடு நகரசபை பகுதி, தத்சம்பாறை, பட்டாம்பி மற்றும் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மாடப்பள்ளி ஆகிய 5 இடங்கள் நோய்த் தொற்று பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தொற்று பரவல் தீவிரமுள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 101-லிருந்து 106 ஆக உயர்ந்துள்ளது''.
இவ்வாறு ஷைலஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT