Published : 31 May 2020 07:22 AM
Last Updated : 31 May 2020 07:22 AM
நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களின் அரசுப் பள்ளிகளில் பயிலும்குழந்தைகளுக்கு மதிய உணவுஇலவசமாக அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் உதவித்தொகையுடன் துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அன்றாடம் மதிய உணவு அளிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமலான ஊரடங்கால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதனால் அந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளுக்கு மதியஉணவு பள்ளிகளில் அளிக்கப்படவில்லை. இதையொட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ஊரடங்கின் துவக்கத்தில் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பேரிடர் உள்ளிட்ட நாட்களில் பள்ளிகளில் அளிக்க முடியாத மதிய உணவை மாணவர்களின் வீடுகளில் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதை அதற்கான மதிப்புள்ள தொகையாக அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று மதிய உணவு வழங்கப்பட்டது. சமைக்க முடியாத நாட்களில் அதற்கான உணவுப்பொருட்களும் மாணவர்களின் வீடுகளில் விநியோகிக்கப்பட்டன. இது தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போதும் மதிய உணவு விநியோகத்தில் கேரளாவின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மதிய உணவு அளிக்கப்படாத நாட்களில் அதன்மதிப்பை கணக்கிட்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படியான தொகையாக அளிக்க முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை உத்தரப்பிரதேச மாநில அரசு நேற்று வெளியிட்டிருந்தது. அதில், முதல்கட்டமாக ஊரடங்குநாட்கள் 76 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்காக துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.374 அளிக்கப்பட உள்ளது. இதே தொகை நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.561 என அளிக்கப்படுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படியான தொகையாக இதற்கான பணம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் பெயர்களை உறுதி செய்ய வேண்டும், பிறகு வங்கிக் கணக்குகளின் விவரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதன்பின் உத்தரப்பிரதேச மாநிலஅரசின் வருவாய்துறை சார்பில் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் தொகை அனுப்பி வைக்கப்பட உள்ளது.
பள்ளிகளின் கோடைவிடுமுறை நாட்களிலும் இந்த தொகையை வழங்கிட உத்தரப்பிரதேச அரசு திட்டமிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT