Published : 31 May 2020 07:18 AM
Last Updated : 31 May 2020 07:18 AM
லடாக் எல்லைப் பிரச்சினை குறித்துசீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 1914-ம் ஆண்டில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியா, சீனா, திபெத் இடையே உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி லடாக், ஜம்மு-காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கடந்த 1949-ம் ஆண்டில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போதுமுதல் லடாக் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
கடந்த 1962-ம் ஆண்டில் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதன்காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்த போருக்குப் பிறகு சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளை பாதுகாக்க இந்தோ-திபெத் எல்லை காவல் படை உருவாக்கப்பட்டது. எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டில் சிக்கிம் மாநிலம் டோக்லாம் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். 72 நாட்களுக்குப் பிறகு சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கினர்.
இதேபோல இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். அங்கு சுமார் 100 கூடாரங்களை அமைத்து சீன வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதற்குப் பதிலடியாக இந்தியவீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் முப்படைத் தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், எல்லையில் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. இதனிடையே லடாக் எல்லைப் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டுட்ரம்ப் அறிவித்தார். இதனை இந்தியாவும் சீனாவும் ஏற்கவில்லை.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
லடாக் பிரச்சினை தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் பேசினேன். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன். அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராஜ்ஜியரீதியிலான உறவு நீடிக்கிறது. ஏதாவது பிரச்சினை எழுந்தால் ராணுவ, ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கடந்த காலங்களில் பிரச்சினைகள் எழுந்தபோது பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட்டது. அந்த அடிப்படையில் லடாக் எல்லை பிரச்சினை குறித்துசீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தியாவின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்பட அனுமதிக்க மாட்டோம். வலுவான தலைமையின் கீழ் இந்தியா செயல்படுகிறது. இதை மக்கள் நன்கறிவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT