Published : 30 May 2020 04:28 PM
Last Updated : 30 May 2020 04:28 PM
ஏழைகள், விவசாயிகள், வேலையில்லாதோர், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என தேசத்து மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட வலியும், வேதனையும் மிகுந்ததாக மாறிவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது கொள்கையை மறு ஆய்வு செய்து, வெளிப்படையாக மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து இன்றுடன்( 30-ம் தேதி) ஓராண்டு நிறைவடைகிறது.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலாம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலம் அனைத்தையும் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலாம் ஆண்டு நிறைவு நாளில் பிரதமர் மோடி மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். பாஜகவின் பல்வேறு மூத்த தலைவர்களும் பிரதமர் மோடியையும், கடந்த ஓராண்டு கால ஆட்சியையும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ட்விட்டரில் பாஜக அரசின் 2-ம் ஆண்டு தொடக்கம் குறித்து விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சியில் அமர்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஏராளமான வாக்குறுதிகள் மக்களிடம் அளிக்கப்பட்டன.
ஆனால், அந்த வாக்குறுதிகள் புரிந்து கொள்ளுதலிலும், யதார்த்தத்திலும், மக்கள் கருத்திலும் வெகு தொலைவு செல்லாமல் இருப்பது சிறப்பாகும்.
பாஜக அரசின் ஆட்சியில் எங்கும் சர்ச்சைகள் நிரம்பியதாக இருக்கின்றன. ஆதலால், நாட்டு மக்களின் நலனிலும், தேசத்தின் மீதும் அக்கறை வைத்து பாஜக அரசு பணியாற்ற வேண்டும்.
ஏழைகள், விவசாயிகள், வேலையில்லாதோர், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் என தேசத்தின் மக்களின் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட வலியும், வேதனையும் மிகுந்ததாக மாறியுள்ளது வருத்தமாகவும், எளிதில் மறக்க முடியாததாகவும் இருக்கிறது.
மத்திய அரசு தனது கொள்கைகளையும், பணியாற்றும் விதத்தையும் மறு ஆய்வு செய்து வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்ற வேண்டும். குறைபாடுகளைக் களைய வேண்டும்.
தேசத்தின் மீது அக்கறை வைத்தும், மக்களின் நலனுக்காகவும் பகுஜன் சமாஜ் இந்த அறிவுரையை வழங்குகிறது'' என்று மாயாவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT