Published : 30 May 2020 12:43 PM
Last Updated : 30 May 2020 12:43 PM
கேரளாவில் சிக்கியிருந்த 167 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான ஒடிசா செல்வதற்கு, தனி விமானத்தை ஏற்பாடுசெய்து பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.
147 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 167 பேர் கொச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் புவனேஷ்வர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
‘தபங்’, ‘அருந்ததி’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சோனு. இப்போது அவர் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் செய்துவரும் உதவிகளாலும், நிவாரணப் பணிகளாலும் நிஜ ஹீரோவாக ஜொலிக்கிறார்.
லாக்டவுன் நடைமுைறக்கு வந்ததில் இருந்து மும்பையிலிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான பேருந்து வசதிகளை சோனு சூட் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார்.
இதற்காக “கர் பேஜோ” இயக்கத்தின் மூலம் இதுவரை 13,000 புலம்பெயர் தொழிலாளர்களை மும்பையிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நாள்தோறும் 45,000 பேருக்கு உணவு, குடிநீர் வசதிகளை அவர் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கேரளாவில் சிக்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 167 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல தனி விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார்.
சோனு சூட் விடுத்த அறிக்கையில், “ லாக்டவுனில் தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தபோது, எவ்வாறு அவர்களை குடும்பத்தாருடன் சேர்த்துவைப்பது, வீட்டில் கொண்டு சேர்ப்பது என்பது மட்டுமே என் மனதில் தோன்றியது.
புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல விமானம் வழங்கிய ஏர் ஏசியா நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். கரோனா நேரத்தில் தொழிலாளர்களைப் பாதுகாப்பாகச் சேர்த்த ஏர் ஏசியா நிறுவனம் கோவிட் ஹீரோ” எனத் தெரிவித்துள்ளார்.
ஏர் ஏசியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் அனுப் மஞ்சேஸ்வர் விடுத்துள்ள அறிவிப்பில், நடிகர் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது வைத்துள்ள இரக்கம், கருணை எங்களை ஈர்க்கிறது. அவருக்குத் தேவையான விமானத்தைத் தந்து உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய 167 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியதை பெருமையாகக் கருதுகிறோம்”.
ஒடிசாவின் கேந்திரப்பாரா மாவட்டத்தைச் சேர்ந்த 167 புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் கேரளாவில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். லாக்டவுன் காரணமாக அங்கு தொடர்ந்து வசிக்க முடியாததால், சிறப்பு விமானம் மூலம் கொச்சியிலிருந்து புவனேஷ்வருக்கு நேற்று வந்தனர்
கேந்திரப்பாராவுக்கு நேற்று வந்த தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 4 பேருந்துகள் மூலம் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லாத பட்சத்தில் 7 நாட்களுக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT