Last Updated : 30 May, 2020 08:20 AM

42  

Published : 30 May 2020 08:20 AM
Last Updated : 30 May 2020 08:20 AM

2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு: கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிப்பாதையில் பயணிக்கிறது; மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிப்பாதையி்ல் பயணித்து வருகிறது, அதேசமயம், புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் உள்ளிட்டோர் மிகப்பெரிய துன்பத்தை சந்தித்து வருவதையும் அறிவேன் என்று பாஜக தலைமையிலான அரசு 2-வதுமுறையாகப் பொறுப்பேற்று முதலாம் ஆண்டு விழாவான இன்று மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து இன்றுடன்( 30-ம் ேததி) ஓர் ஆண்டு நிறைவடைகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலாம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது.

ஆனால், தற்போது கரோனா வைரஸ் பாதிப்புஅதிகரித்து வருவதால் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்-லைன் மூலம் அனைத்தையும் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து முதலாம் ஆண்டு நிறைவு நாளில் பிரதமர் மோடி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பாஜக அரசு 2-வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று இன்றுடன் முதலாம்ஆண்டு நிறைவடைகிறது. வழக்கமாக இந்த நேரத்தில் நான் மக்கள் மத்தியில் இருந்திருப்பேன். ஆனால், தற்போதுள்ள கரோனா சூழல், ஊரடங்கு போன்றவற்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மக்களுக்கு கடிதம் எழுதுகிறேன்

கடந்த ஓர் ஆண்டில் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக என்னுடைய அரசு பல வரலாற்று முடிவுகளை எடுத்திருக்கிறது. பல்வேறு சவால்களையும், பிரச்சினைகளையும் நாடு சந்தித்து வருவதால், ஏராளமான செயல்கள் செய்ய வேண்டிய தேவை இருந்தது

நான் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். என் செயல்பாடுகளில், என்னுள் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், எந்த விதத்திலும் நாட்டில் இல்லை. நான் உங்களை(மக்களை) நம்புகிறேன், உங்கள் வலிமை, திறமை போன்றவற்றை என்னை நம்புவதைவிட அதிகமாக நம்புகிறேன்.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நம்முடைய தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கலைஞர்கள், சிறு,குறுந்தொழிலில் பணியாற்றும் ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள், மக்கள் அனைவரும் பெரிய துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் துன்பத்தை ஒழிக்க நாங்கள் ஒற்றுமையாக, தீர்மானத்துடன் பணியாற்றி வருகிறோம்.

நீங்கள் சந்திக்கும் அசவுகரியங்கள் அனைத்தும் பேரழிவுகளாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கரோனா வைரஸைத் தடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளை, வழிகாட்டி நெறிமுறைகளை ஒவ்வொருவரும் உணர்ந்து கடைபிடிப்பது முக்கியம். மக்கள் இப்போதுவரை பொறுமையுடன் இருக்கிறார்கள், இது தொடர வேண்டும்

இந்த பொறுமைதான் உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கு முக்கியக்காரணம். கரோனாவுக்கு எதிராக மேற்கொண்டிருப்பது நீண்டகாலப் போர், நாம் இந்த போரில் வெற்றிப்பாதையி்ல் பயணித்து வருகிறோம், வெற்றிதான் நம்முடைய கூட்டுத்தீர்மானம்.

இந்தியா உள்பட உலக நாடுகள் பொருளாதார சீரழிவிலிருந்து எவ்வாறு மீளும் என்பது கரோனா வைரஸ் ஒழிந்தபின் பரவலாக விவாதிக்கப்படும். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒற்றுமையையும், அதை ஒழிக்க நடத்தும் போராட்டத்தையும் வெளிப்படுத்தி உலகை இந்தியா வியக்க வைத்துள்ளது. பொருளாதார மறுமலர்ச்சிக்கும் இதேபோன்ற உதாரணமாக இந்தியா உருவாகும் என உறுதியாக நம்புகிறேன்.

தற்சார்பு பொருளாதாரம் என்பது இந்த நேரத்தில் அவசியமானது. நமது சொந்த திறமை, நமக்கான பாதையில் நகர்ந்து வருகிறோம், அதுதான் தற்சார்பு பொருளாதாரம். இதற்காக ரூ.20லட்சம் கோடி நிதித்தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான முக்கிய அறிவிப்பாகும்.

மத்திய அரசின் இந்த தொடக்கம் ஒவ்வொரு இந்தியருக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தும், நம்முடைய விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய தொழில்முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும்

கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் இந்த காலக்கட்டம் நெருக்கடியானதுதான். இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என அனைவரும் உறுதியான தீர்மானம் கொள்ள வேண்டும்.

தேசத்தில் உள்ள 130 கோடி மக்களின் தற்போதைய மற்றும எதிர்காலம் துன்பத்தால் கட்டளையிடப்படாது என்பதை கண்டிப்பாக நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நமது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் நாம்தான் முடிவு செய்வோம். நம்முடைய வளர்ச்சி, வெற்றியை நோக்கி நாம் முன்னேறுவோம். ஒரு கையில் மக்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டால் மறு கையில் வெற்றி உறுதியாக வந்து சேரும்.

நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன, பல சாதனைகள் படைத்துள்ளன, முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.எங்கள் அரசின் கொள்கைகள், புதிய முடிவுகள் மூலம் கிராமப்புறம்-நகரங்களுக்கு இடையிாலன இடைவெளி சுருங்கியுள்ளது. முதல்முறையாக நகர்புற மக்களைவிட கிராமப்புற மக்கள் 10 சதவீதம் அதிகமாக இணையதளம் பயன்படுத்துகிறார்கள்.

மக்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவினால் 2019-ம் ஆண்டு தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். கடந்த ஆண்டு இதேநாள் இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு பொன்னான சகாத்பம் தொடங்கிய நாள். பல 10ஆண்டுகளுக்குப்பின் மக்கள் அரிதிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக ஒரே அரசை தேர்வு செய்தார்கள்.

நாங்கள் ஆட்சியை தொடர வேண்டும் என்பதற்காக மட்டும் மக்கள் வாக்களிக்காமல், இந்தியாவை உலகத்தின் தலைவனாக மாற்ற வேண்டும், புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்லும் கனவை நிறைவேற்ற வாக்களித்தார்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய 370 பிரிவை நாங்கள் நீக்கியது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் உணர்வை வெளிப்படுத்தியது. அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நூற்றாண்டுகாலம் நீடித்து வந்த சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்தது.

காட்டுமிரண்டித்தனமான முத்தலாக் முறை வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் திருத்தம் இந்தியாவின் இரக்கம் மற்றும் முழுமைத்தன்மையை காட்டியது.

இவ்வாறு பிரமதர் மோடி தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x