Published : 29 May 2020 12:10 PM
Last Updated : 29 May 2020 12:10 PM
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்புள்ளவர்களைக் காக்கும் வகையில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளவர்கள் அவசியமின்றி ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ரயில்வே தினம்தோறும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை நாடு முழுவதும் இயக்கி வருகிறது. இவை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வகையில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த சேவையைப் பெறுபவர்களில் சிலர் ஏற்கெனவே பலவித உடல்நலக் கோளாறுகள் இருக்கும் சூழலில் பயணிப்பதால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.
இவ்வாறாக உடல் அசவுகரியங்கள் உள்ளோர் கரோனாவால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நாள நோய்கள், புற்றுநோய், இன்னும் பிற நோய் எதிர்ப்பு குறைபாடுகள் மற்றும் கர்ப்பிணிகள் 10 வயதுக்கும் கீழ் இருக்கும் குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அவசியமின்றி ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்திய ரயில்வே துறையினர் 24 மணி நேரம் மக்கள் நலனுக்காக சேவை செய்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்குப் பிரதானம். ஆகையால் இவ்விஷயத்தில் மக்களின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயணத்தின் போது ஏற்படும் நெருக்கடிகளின் போது தயங்காமல் 139, 138 போன்ற ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு ரயில்வே துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க ரயில்வே துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிஹாரின் முசாபர்பூரில் ரயில்வே நிலைய பிளாட்பாரத்தில் இறந்து கிடந்த தனது தாயை எழுப்ப முயன்ற குழந்தையின் வீடியோ நாட்டையே உலுக்கியது. பசியுடன் பல நாட்கள் பயணித்ததால் அப்பெண் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அதேபோல் நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசம் சென்ற ரயிலின் கழிவறையில் புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்தச் செய்திகள் சர்ச்சையாகி வரும் நிலையில் ரயில்வே துறை இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT