Last Updated : 29 May, 2020 11:09 AM

 

Published : 29 May 2020 11:09 AM
Last Updated : 29 May 2020 11:09 AM

டெல்லி காவல்நிலையங்களில் ஆங்கிலேயர் காலத்து குற்றப்பதிவேடுகளுக்கு முடிவு: ஜுன் 1 முதல் நேரடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

புதுடெல்லி

ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு டெல்லி காவல்நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த குற்றப்பதிவேடுகளின் பயன்பாடு முடிவிற்கு வந்துள்ளது.

அதன் தகவல்களை ஜூன் 1 முதல் நேரடியாக, குற்றம் மற்றும் குற்றவாளிகளை பின்தொடரும் முறையான CCTN(Crime and Criminal Tracking Networking System) என்றழைக்கப்படும் இணையத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியின் காவல்நிலையங்களில் பதிவாகும் எப்ஐஆர், அபராதங்களுக்கு உரிய குற்றங்கள், காவல்துறை கட்டுப்பாடு அறை(பிசிஆர்) புகார், காணாமல் போனவர் மற்றும் காவல்நிலைய டயரி குறிப்புகள் என ஐந்து முக்கிய பதிவேடுகள் உள்ளன.

இவற்றில் அன்றாடம் பதிவு செய்யப்படும் தகவல்களை, குற்றம் மற்றும் குற்றவாளிகளை பின்தொடரும் முறையான சிசிடிஎன் இல் பதிவு செய்வதும் வழக்கம். இந்த சிசிடிஎன் தகவல்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் குற்றங்களில் டெல்லி சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க உதவும்.

அதேபோல், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் டெல்லியில் செய்யும் குற்றங்களுக்கானக் குற்றவாளிகளை கைது செய்யவும் உதவுவது ஆகும். இந்த 5 பதிவேடுகளின் தகவல்களை, டெல்லி காவல்நிலையங்களில் பலசமயம் சிசிடிஎன் இல் பதிவேற்றம் செய்ய தாமதமாகி விடுவதாகக் கருதப்படுகிறது.

இதனால், பல குற்றவாளிகள் தப்பி விடும் சூழலும் உருவாகிறது. மேலும், சிசிடிஎன் இல் பதிவேற்றம் செய்யப்படும் போது, குற்றப்பதிவேடுகளின் தகவல்களில் சாதகமான மாற்றங்கள் செய்யவும் வாய்ப்பாகி விடுகிறது.

இதன் மீதான பல்வேறு புகார்களும் டெல்லி காவல்துறை தலைமையகத்தில் வருவது உண்டு. இதற்கு ஒரு முடிவுகட்டும் பொருட்டு டெல்லி மாநிலக் காவல்துறையின்

சார்பில் கடந்த மே 7 மற்றும் 15 தேதிகளில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதற்கு காவல்துறையின் தலைமை ஆணையரான எஸ்.என்.ஸ்ரீவாத்ஸவா தலைமை வகித்திருந்தார். இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவின்படி, ஜூன் 1 முதல் அனைத்து காவல்நிலையங்களிலும் 5 முக்கியப் பதிவேடுகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக அந்த தகவல்களை நேரடியாக சிசிடிஎன் இல் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை, அனைத்து காவல்நிலையங்களுக்கும் டெல்லியின் காவல்துறை தலைமையகம் சார்பில் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் இந்த புதிய உத்தரவை மீறும் காவல்நிலையங்களுக்கு அபராதம் விதிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மன்னராட்சிக்கு பின் வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் காவல்நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

இதில் வரும் புகார்களை பதிவு செய்ய முதன்முறையாக இரண்டு வகை குற்றப்பதிவேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாளடைவில் நவீன காலத்திற்கு ஏற்றபடி கணிகளும், இணையதளங்களும் வந்த பின்பும் ஆங்கிலேயர்கள் காலத்து முறை ஒழிக்கப்படாமல் இருந்தது.

இந்த குற்றப்பதிவேடுகள் ஒவ்வொரு மாநிலங்களின் வசதிகேற்ற எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தவகையில், 23 வகையான குற்றப்பதிவேடுகள் பஞ்சாபில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x