Published : 28 May 2020 04:19 PM
Last Updated : 28 May 2020 04:19 PM
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்
புல்மாவா மாவட்டத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த ஐஇடி வெடிமருந்துடன் வந்த காரை மடக்கிப்பிடித்த போது இந்த சதித்திட்டம் குறித்து பாதுகாப்புபடையினருக்குத் தெரியவந்தது
இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய் குமார் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இரு தரப்பினரும் கூட்டாகச் சேர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் வாகனைத்தின் மீது நடத்திய தாக்குதல் போல் மீண்டும் பாதுகாப்புபடையினர் மீது திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக கடந்த வாரத்திலிருந்து எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதற்காக பிரத்யேக காரை தயார் செய்து வருகிறார்கள் என்று கிடைத்த தகவலால் பாதுகாப்புப்படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இதுதொடர்பான தகவல் உறுதியானதால், சோதனையை தீவிரப்படுத்தினோம். அப்போது புல்வாமாவில் நேற்று மாலை பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திடமான கார் ஒன்று வருவதை அறிந்து அதை தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால், காரின் ஓட்டுநர் பாதுகாப்புப்படையினரைப் பார்த்ததும், மாலை நேர இருளைப் பயன்படுத்தி காரை விட்டு இறங்கி தப்பினார், போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது காட்டுப்பகுதிக்குள் தப்பிவிட்டார். இதன்பின் பாதுகாப்பு படையினர் அந்த வாகனத்தை சோதனையிட்ட போது காரின் பின்பகுதியில் ஏதோ பொருள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்
இன்று காலை வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு அந்த கார் முழுவதும் சோதனையிடப்பட்டது. அந்த காரில் சக்திவாய்ந்த 45 கிலோ ஐஇடி வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் போலீஸார், ராணுவம், துணை ராணுவத்தில் இருக்கும் வெடிகுண்டு செயல்இழப்பு பிரிவினரால் அந்த வெடிகுண்டு அகற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது. தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்த பாதுகாப்பு படையினர், போலீஸார் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.
ரமலான் மாதத்தின் 17வது நாளான ஜாங் இ பதர் நாளில் பாதுகாப்பு படையினர் மீது இந்த தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை, தீவிரமான ரோந்துப்பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டதால், அந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது
இந்த சூழலில் நேற்று கிடைத்த உறுதியான தகவலில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஃபாஜி பாய் இருவரும் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார்கள்.இதில் ஃபாஜி பாய் பாகிஸ்தான் தீவிரவாதியாாவார்.
புல்வாமா தாக்குதலைப்போன்று இந்த முறையும் 45 கிலோ சக்தி வாய்ந்த ஐஇடி வெடிமருந்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த மருந்து வெடித்தால் வானில் 50 மீட்டர் அளவுக்கு வாகனம் சிதறும்
இவ்வாறு விஜய்குமார் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT