Published : 28 May 2020 09:13 AM
Last Updated : 28 May 2020 09:13 AM
மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களில் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆளுநர் மாளிகையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சிங் சவுகானும், ஆளுநராக லால்ஜி டான்டனும் உள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் ஏற்பட்டதிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலமும் மோசமாகவே பாதிக்கப்பட்டு வருகிறது.
அங்கு இதுவரை 7 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 305 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 689 பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக போபால், இந்தூர் போன்ற நகரங்களில் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்களில் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் மாளிகையின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் ஊடகப் பிரிவு அதிகாரி அஜய்வர்மா கூறுகையில், ''ஆளுநர் மாளிகையில் பணியாற்றிவரும் ஊழியர்களில் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆளுநர் மாளிகையின் ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் டான்டனுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கரோனா இல்லை.
ஆளுநருக்கு உதவும் அனைத்து ஊழியர்களும் பரிசோதிக்கப்பட்டனர். அதில் அவர்களுக்கு கரோனா இல்லை எனத் தெரியவந்ததால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதியுடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்பதற்காக விருந்தினர் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் வாகனம் சுத்தம் செய்பவரின் மகன் குடியிருப்பில் தங்கியிருந்தபோது கரோனா வைரஸ் தொற்று கடந்த 2 நாட்களுக்கு முன் ஏற்பட்டது. அதன்பின் அந்தக் குடும்பத்தில் உள்ள 4 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மேலும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்களுக்கும் கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதனால் ஆளுநர் வளாகத்தின் ஒருபகுதி, ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூரிலிருந்து வரும் ஒரு ஊழியர் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆளுநர் லால்ஜி டான்டன் சமூக விலகலைக் கடைப்பிடித்து தனது வழக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT