Published : 27 May 2020 04:31 PM
Last Updated : 27 May 2020 04:31 PM

ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்: புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையை தானாகவே உச்ச நீதிமன்றம் எடுத்ததன் பின்னணி

கரோனா வைரஸ் லாக் டவுன் உத்தரவுகளினால் கடும் அவதிக்கும் இன்னல்களுக்கும், வறுமைக்குள்ளும், மரணத்துக்கும் தள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை தானாகவே முன்வந்து உச்ச நீதிமன்றம் கையிலெடுப்பதற்கு முன்பாக ப.சிதம்பரம், கபில்சிபல், இந்திரா ஜெய்சிங் உட்பட முன்னணி வழக்கறிஞர்கள் சிலர் காட்டமாக கடிதம் எழுதியது தெரியவந்துள்ளது.

தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் விதமாக நீதித்துறை அரசாங்கத்துக்கு அடிபணிந்து கிடப்பதாக இந்தக் கடிதத்தில் இவர்கள் சாடியுள்ளனர். அதாவது மிகப்பெரிய அளவிலான மனிதார்த்த நெருக்கடி காலத்தில் நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் “விருப்பமில்லாமலும்” ‘அலட்சியமாகவும்’ இருப்பதாக இவர்கள் சாடினர்.

ப.சிதம்பரம், கபில் சிபல், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங், விகாஸ் சிங், இக்பால் சாவ்லா, நவ்ரோஸ் சீர்வை ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் கூறும்போது, “மத்திய அரசின் வெற்று உறுதிகளையும் தவறான அறிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நம்ப முடிவெடுத்த முறை எமர்ஜென்சி காலக்கட்டத்தில் இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நினைவூட்டுகிறது” என்றனர்.

வழக்கறிஞர்களில் ஆனந்த் குரோவர், மோஹன் கடார்கி, சித்தார்த் லுத்ரா, சந்தோஷ் பால், மஹாலஷ்மி பவானி, சி.யு.சிங், அஸ்பி சினாய், மிஹிர் தேசாய், ஜனக் துவாரக் தாஸ், ரஜனி அய்யர், யூசுப் முகாலா, ராஜிவ் பாட்டீல், காயத்ரி சிங் மற்றும் சஞ்சய் சிங்வி ஆகியோரும் அடங்குவர்.

இந்தக் காட்டமான கடிதம் உச்ச நீதிமன்றத்திற்கு திங்களன்று கிடைத்ததாகவும், செவ்வாயன்று தானாகவே முன் வந்து புலம்பெயர்வோர் பிரச்சினைகளை எடுத்ததாகவும் கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு நடவடிக்கைகளில் போதாமைகளும் குறைபாடுகளும் உள்ளதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவச போக்குவரத்து அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. வியாழனன்று மீண்டும் இது விசாரணைக்கு வருகிறது.

மார்ச் 31ம் தேதி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில், “எந்த ஒரு புலம்பெயர் தொழிலாளரும் சாலையில் நடந்து செல்லவில்லை” என்று கூறியதை உச்ச நீதிமன்றம் எப்படி திருப்தி தரும் பதிலாக எடுத்துக் கொண்டது என்பதை இந்தக் கடிதத்தில் மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். இதைவிட கோர்ட் ஒரு படிமேலே போய், “புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கிப் பயணிப்பதற்கு போலிச்செய்திகளே காரணம்” என்று கூட கூறியது.

மே மாத மத்தியில் கூட இத்தனை மரணங்களுக்கும் பிறகும் கூட உச்ச நீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் தலையிடமால் வாளாவிருந்தது. அதாவது இவையெல்லாம் ‘அரசின் கொள்கை முடிவுகள், அவர்களிடமே விட்டு விடுவது நல்லது’ என்றே நீதிமன்றம் கருதுகிறது என்பதை இந்தக் கடிதத்தில் காட்டமாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

“புலம்பெயர் தொழிலாளர் விவகாரம் கொள்கை விவகாரம் அல்ல, அரசியல் சாசன விவகாரம் ஆகும். சட்டப்பிரிவு 142ன் கீழ் நீதியை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது. இப்படி கோர்ட் வாளாவிருப்பது நீதிமன்றத்தின் நோக்கமான தர்மம் வெல்லும் என்பதற்கு நியாயம் செய்யாது” என்று இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x