Published : 27 May 2020 01:46 PM
Last Updated : 27 May 2020 01:46 PM
கைதிகள் மூலம் போலீஸாருக்கும் நீதிபதிகளுக்கும் கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் கைதிகளை காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லாமலேயே விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், கேரளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
‘கேரளாவில் நேற்று மிக அதிக அளவாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 29 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 8 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 6 பேர் கோட்டயம், 5 பேர் மலப்புரம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் திருச்சூர் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் காசர்கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள்.
நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 33 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும், 27 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த 15 பேருக்கும், தமிழ்நாட்டிலிருந்து வந்த 9 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 5 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த 2 பேருக்கும், டெல்லி மற்றும் புதுச்சேரியிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்லாமல், கரோனா நோயாளியுடன் தொடர்பிலிருந்த 7 பேருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் நோய்த் தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கேரளாவில் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 963. இதில் 415 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 1,03,528 பேர் வீடுகளிலும், 808 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். நேற்று கரோனா அறிகுறிகளுடன் 186 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் புதிதாக 9 பகுதிகள் நோய்த் தீவிரம் உள்ள ஹாட் ஸ்பாட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஹாட் ஸ்பாட் பட்டியலில் உள்ள பகுதிகள் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கண்ணூர் மாவட்டம் தர்மடத்தைச் சேர்ந்த ஆசியா என்ற 61 வயதுப் பெண்மணி மரணமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான ஆட்கள் வரத் தொடங்கி இருப்பதால் நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நாம் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளோம். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை எந்தக் காரணம் கொண்டும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது. இதனால்தான் வெளியிலிருந்து வருபவர்கள், கண்டிப்பாக கேரளாவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தால் மட்டுமே அவர்கள் குறித்த விவரங்கள் நமக்குத் தெரியவரும். இதன் மூலமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் கேரளாவில் கரோனா தொற்று, சமூகப் பரவலாகிவிடும் அபாயம் உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பல லட்சம் பேர் கேரளாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அனைவரும் ஒரே சமயத்தில் இங்கு வர முடியாது. அதனால் கர்ப்பிணிகள், நோயாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து கேரளா வர அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை கேரளா வர 3,80,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2,16,000 பேருக்கு இ - பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 1,01,789 பேர் கேரளா வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 1,34,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் இதுவரை 11,189 பேர் கேரளா வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் கேரளாவில் 16 பேர் மட்டுமே கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் இருந்தனர். ஆனால் இப்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
மகாராஷ்டிராவிலிருந்து வந்த 72 பேருக்கும், தமிழ்நாட்டிலிருந்து வந்த 71 பேருக்கும், கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த 35 பேருக்கும் மிக அதிகமாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 133 பேருக்கு இதுவரை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து அனுமதி இல்லாமல் தொழிலாளர்கள் கேரளாவுக்கு வருவதாகத் தகவல் வந்துள்ளது. எனவே, அனுமதியின்றி கேரளாவுக்கு வந்தால் அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன் 28 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்குள்ளும் வைக்கப்படுவார்கள்.
கைதிகளுக்குக் கரோனா தொற்று இருப்பதன் மூலம் போலீஸார் மற்றும் நீதிபதிகளுக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, குற்றவாளிகளைக் கைது செய்யும்போது அவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அழைத்துச் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நேற்று கேரளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மாணவர்கள் அச்சம் இன்றித் தேர்வு எழுதினர். தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்''.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT