Published : 26 May 2020 01:19 PM
Last Updated : 26 May 2020 01:19 PM
கரோனா வைரஸால் மகாராஷ்டிர மாநிலம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள் சேவையாற்றும் போலீஸாரும் அதற்குத் தப்பவில்லை. இதுவரை அந்த மாநிலத்தில் 18 போலீஸார் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,809 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை 52 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,695 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்பிலும், பாதிப்பிலும் பொதுமக்கள் மட்டுமின்றி மக்கள் சேவையாற்றிய போலீஸாரும் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். இதுவரை 194 போலீஸ் அதிகாரிகள், 1,615 போலீஸார் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,113 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
கரோனாவில் ஒரு போலீஸ் ஆய்வாளர் உள்பட 17 போலீஸார் உயிரிழந்துள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 12 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் 30 வயதுக்குட்பட்டவர் ஆவார்.
கரோனா அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகமான நேரம் பணியில் போலீஸாரை ஈடுபடுத்துவதுதான் போலீஸார் பாதிக்கப்படக் காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தாராவி, மார்க்கெட் பகுதிகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் பணி, கூட்டமான இடங்களில் மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட போலீஸார் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மகாராஷ்டிர அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் 20 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியிலும், மக்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளதால், வரும் வாரங்களில் போலீஸார் பாதிக்கப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக போலீஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸார், நீண்டகாலமாக உடல்ரீதியான கோளாறுகள் இருப்போர் பணிக்கு வர வேண்டாம் என மும்பை போலீஸார் அறிவுறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸாரிடையே கரோனா பாதிப்பு அதிகரித்தபோதிலும் அவர்கள் தங்கள் பணியிலிருந்து உற்சாகம் குறைவில்லாமல் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 1.14 லட்சம் பேர் மீது ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் வழக்குகள், வாகனப் பறிமுதல், சட்டம் ஒழுங்கு மீறல், போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற வழக்குளை நாள்தோறும் பதிவு செய்து வரும் போலீஸார் இதுவரை ரூ.5.50 கோடியை அபராதமாக வசூலித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT