Published : 26 May 2020 07:30 AM
Last Updated : 26 May 2020 07:30 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான பராமரிக்க முடியாத சொத்துகள் மட்டுமே ஏலம்: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி விளக்கம்

ஒய்.வி. சுப்பா ரெட்டி.

திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான அசையாசொத்துகளில், பராமரிக்க இயலாதசொத்துகளை மட்டுமே ஏலம் விடப்போவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத் துறை சட்டம் 311/1990-ன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அதன் அசையா சொத்துகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ உரிமை உள்ளது. ஆனால், சில நாட்களாக சில ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சியினர் தேவஸ்தானத்துக்கு அவப்பெயர் வரும் வண்ணம் பேசி வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் அசையா சொத்துகளில் பலமிகச்சிறியவையாகவும், பராமரிக்க முடியாத விவசாய நிலங்களாகவும் உள்ளன.

இவைகளை பகிரங்க ஏலம்மூலம் சந்தை விலையைவிட அதிகமாக விற்க முடிவு செய்துள்ளோம். 1974-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இதுபோன்று 129 அசையா சொத்துகள் முறைப்படி பகிரங்க ஏலம் அடிப்படையில் விற்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த சி.கிருஷ்ணமூர்த்தி, இதற்காக ஒரு உபக்குழுவை நியமித்தார்.

இக்குழு மூலம் பராமரிப்பற்ற, மிகச்சிறிய அசையா சொத்துகளான 50 சொத்துகளை விற்க அறங்காவலர் குழு ஒருமனதாக தீர்மானித்தது. இதில் ஒரு சொத்து மட்டும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மற்ற 49 (ஆந்திரா 26, தமிழகம் 23) சொத்துகளை விற்க தற்போதுள்ள அறங்காவலர் குழுவில் மறு தீர்மானம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி போடப்பட்டது. அப்போது ரிஷிகேஷில் உள்ள 1.20 ஏக்கர் நிலமும் இதில் இணைக்கப்பட்டது.

ரிஷிகேஷ் இடம் சிலரின் ஆக்ரமிப்புக்கு உள்ளாவதால் இதனை விற்க முடிவு செய்தோம். இதன்மொத்த மதிப்பு ரூ.23.92 கோடியாகும். இதனை சந்தை விலைக்கே பகிரங்க ஏலம் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு செண்ட் முதல் 10 செண்ட் வரை உள்ள நிலங்கள், சிறிய வீட்டு மனைகளை மட்டுமே விற்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது கடந்தஅறங்காவலர் குழுவில் தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயமாகும். ஆனால், இதனை எதிர்கட்சியினர் அரசியலாக்க பார்க்கின்றனர்.

இதற்கும் இப்போதைய அரசுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் சில பத்திரிகைகள், ஊடகங்கள் செய்தியை திரிக்கப் பார்க்கின்றன. இவைகளை பக்தர்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

நில விற்பனையை நிறுத்த அரசாணை

ஆந்திர இந்துசமய அற நிலைத்துறை சார்பில் நேற்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

பக்தர்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு நில விற்பனையை தேவஸ்தானம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். பீடாதிபதிகள், மடாதிபதிகள், பக்தர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே இதற்கான முடிவை மேற்கொள்ள வேண்டும். விற்க முடிவு செய்த நிலங்களில் கோயில் கட்டலாமா, மதம் சம்மந்தப்பட்ட மற்ற விஷயங்களை மேற்கொள்ளலாமா என தேவஸ்தானம் பரிசீலிக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் முழுமையாக பரிசீலனை செய்த பிறகே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவரை ஏழுமலையானின் அசையா சொத்துகளை விற்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x