Published : 25 May 2020 07:38 PM
Last Updated : 25 May 2020 07:38 PM
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய அசையா சொத்துகளில், பயன்படாத, பராமரிக்க இயலாத சொத்துகளை மட்டுமே ஏலம் விடப்போவதாகவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத் துறை சட்டம் 311/1990-ன் படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அதன் அசையா சொத்துகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ உரிமை உள்ளது. ஆனால், சில நாட்களாக சில ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சியினர் தேவஸ்தானத்துக்கு அவப்பெயர் வரும் வண்ணம் பேசி வருகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் அசையா சொத்துகளில் பல மிகச்சிறியவையாகவும், பராமரிக்க முடியாத விவசாய நிலங்களாகவும் உள்ளன.
இவற்றைப் பகிரங்க ஏலம் மூலம் சந்தை விலையைவிட அதிகமாக விற்று தேவஸ்தானத்துக்கு நன்மையே செய்ய முடிவு செய்துள்ளோம். இது கடந்த 1974-ம் ஆண்டு முதல் வழக்கமாக நடைபெறும் ஒரு செயலாகும். 1974-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இதுபோன்று 129 அசையா சொத்துகள் முறைப்படி பகிரங்க ஏலம் அடிப்படையில் விற்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த சி.கிருஷ்ணமூர்த்தி, இதற்காக ஒரு உபக்குழுவை நியமித்தார்.
இக்குழு மூலம் பராமரிப்பற்ற, மிகச்சிறிய அசையா சொத்துகளான 50 சொத்துகளை விற்க அறங்காவலர் குழு ஒருமனதாக தீர்மானித்தது. இதில் ஒரு சொத்து மட்டும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மற்ற 49 (ஆந்திரா 26, தமிழகம் 23) சொத்துகளை விற்க தற்போதுள்ள அறங்காவலர் குழுவில் மறு தீர்மானம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி போடப்பட்டது. அப்போது ரிஷிகேஷில் உள்ள 1.20 ஏக்கர் நிலமும் இதில் இணைக்கப்பட்டது.
ரிஷிகேஷ் இடம் சிலரின் ஆக்ரமிப்புக்கு உள்ளாவதால் இதனை விற்க முடிவு செய்தோம். இதன் மொத்த மதிப்பு ரூ.23.92 கோடியாகும். இதனை சந்தை விலைக்கே பகிரங்க ஏலம் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சென்ட் முதல் 10 சென்ட் வரை உள்ள நிலங்கள், சிறிய வீட்டு மனைகளை மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த அறங்காவலர் குழுவில் தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயமாகும். ஆனால், இதனை எதிர்க்கட்சியினர் அரசியலாக்கப் பார்க்கின்றனர்.
இதற்கும் இப்போதைய அரசுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் சில பத்திரிகைகள், ஊடகங்கள் செய்தியை திரிக்கப் பார்க்கின்றன. இவற்றை பக்தர்கள் நம்ப வேண்டாம்''.
இவ்வாறு ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பக்தர்கள் காணிக்கையாகவும், நம்பிக்கையாகவும் வழங்கிய சொத்துகளை தேவஸ்தானம் எப்படி விற்கும்? என தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. தேவஸ்தானத்தின் தீர்மானத்தை எதிர்த்து ஆந்திர மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியினர், பக்தர்கள் அவரவர் வீடுகளில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துங்கள் என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா அறிவித்துள்ளார்.
ஜனசேனா கட்சித்தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கூறும்போது, "ரூ.23.92 கோடி சொத்துகளை விற்று தேவஸ்தானம் என்ன செய்ய போகிறது? இதற்கு பதில் வேறு ஏதாவது ஒரு வழியில் இந்த பணத்தை தேவஸ்தானம் சம்பாதித்துக் கொள்ளலாம்" என்றார்.
மேலும் சிலர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் ஏழுமலையானின் சொத்துப் பிரச்சினை பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கும் என கருதப்படுகிறது.
ஏழுமலையானின் நில விற்பனையை நிறுத்த அரசாணை
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானின் அசையா சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்யும் தீர்மானத்தை ரத்து செய்து இன்றிரவு திடீரென ஆந்திர அரசு புதிய அரசாணையைப் பிறப்பித்தது.
ஆந்திர மாநில இந்து சமய அற நிலைத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
''பக்தர்களின் நம்பிக்கையை மனதில் கொண்டு இந்த அம்சத்தை தேவஸ்தானம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். பீடாதிபதிகள், மடாதிபதிகள், பக்தர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இதற்கான முடிவை மேற்கொள்ள வேண்டும். விற்க முடிவு செய்த நிலங்களில் கோயில் கட்டுவது, தர்ம பிரசாதம் மேற்கொள்வது, மதம் சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களை மேற்கொள்ளலாமா என தேவஸ்தானம் மறு பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும். மேற்கொண்ட அனைத்து அம்சங்களையும் முழுமையாகப் பரிசீலனை செய்த பிறகே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவரை ஏழுமலையானின் அசையா சொத்துகளை விற்கக் கூடாது''.
இவ்வாறு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்காலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT